கடலூர் மாவட்டத்தில் சிதிலமடைந்த நிலையில் இருக்கும் பள்ளிக் கட்டிடங்களின் அடித்தளத்தில் இருக்கும் மணலை எடுத்து விற்பனை செய்வதில் திமுகவினரிடையே போட்டா போட்டி நிலவுவதால் கட்டிடங்களை இடிப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது.
நெல்லை மாவட்டத்தில் பள்ளிக் கழிவறைக் கட்டிடம் இடிந்து 3 மாணவர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பள்ளிக் கட்டிடங்களின் உறுதித் தன்மையை ஆய்வு செய்து உறுதியற்ற நிலையில் உள்ள பள்ளிக் கட்டிடங்களை இடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள 2,206 பள்ளிகளில் 789 வகுப்பறைக் கட்டிடங்கள் சேதமடைந்த நிலையில் இருப்பதாககணக்கிடப்பட்டுள்ளது. அவற்றை இடிப்பதற் கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பொதுப்பணித்துறை கட்டிட அதிகாரிகள் கடந்த வாரம் கடலூர் மாவட்டத்தில் பள்ளிக் கட்டிடங்களை ஆய்வு செய்தனர். இதில் சுமார் 170 அரசுப் பள்ளிகளில் கட்டிடங்கள் சிதிலமடைந்த நிலையில் இருப்பதாக கண்டறிந்து அரசுக்குஅறிக்கை அளித்துள்ளனர். இதன்படி ஊராட்சி ஒன்றியங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிக் கட்டிடங்களை இடிக்க ஊராட்சி ஒன்றிய நிர்வாகங்கள் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன. அதற்காக ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. இதில் திமுகவைச் சேர்ந்த ஒன்றியச் செயலாளர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி கவுன் சிலர்களிடையே பலத்தப் போட்டி எழுந் துள்ளது. குறிப்பாக கட்டிடத்தில் எஞ்சிய கதவு ஜன்னலை எடுத்து விற்பனை செய்வ தற்கும், உடைக்கப்படும் கட்டிடத்தின் கழிவு களை விற்பனை செய்வதற்கும் போட்டி நிலவுகிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக 40 ஆண்டு களுக்கு முன் கட்டப்பட்ட கட்டிடங்களின் அடித்தளத்தில் மணல் கொட்டப்பட்டு தான் பள்ளிக் கட்டிடங்கள் கட்டப்பட்டன. இடிக்கப்பட்ட கட்டிடத்தின் கீழ் பகுதியில் இருக்கும் மணலை ஒரு டிராக்டர் லோடு ரூ.10 ஆயிரம் வரை விற்பனை செய்து வருகின்றனர்.
கம்மாபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட சேப்ளாநத்தம் ஊராட்சியில் ஒன்றிய செயலாளர் ஒருவர், அமைச்சரின் ஒருவரின் பெயரைக்கூறி, ஒன்றியத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளின் கட்டிடங்களின் ஒப்பந்தத் தையும் தனக்குத் தான் தரவேண்டும் என்று கறாராக பேசுவதால், அதிகாரிகள் எதுவும் பேச முடியாமல் திணறி வருகின்றனராம். கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியத்தின் தலை வராக அதிமுகவைச் சேர்ந்த பட்டியலினப் பெண் இருப்பதால், அவரும் எதுவும் பேச முடியாமல் உள்ளாராம்.
அண்மையில் பெய்த மழையினால் சிதிலமடைந்த பல கட்டிடங்களின் சுவர் களின் ஈரப்பதம் காயவில்லை. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலை யில் காணப்படுவதால், அசம்பாவிதம் நேருமுன் கட்டிடத்தை இடிப்பார்கள் என பார்த்தால் இவர்களுக்கு இடையேயான போட்டா போட்டியால் காலதாமதம் ஏற்படுவது நல்லதல்ல என்கின்றனர் பள்ளித் தலைமையாசிரியர்கள்.