‘ஒமைக்ரான்’ தொற்று பரவலைக் கட்டுப்படுத்த ஜல்லிகட்டுப் போட்டிகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்து கடிதம் அனுப்பியுயுள்ளது.
இக்கடிதம் குறித்து சங்கத்தின் தலைவர் செந்தில் கூறியதாவது:
கடந்த ஆண்டு ‘கரோனா’ பரவலின்போது அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டன. அதுபோன்று இனியும் ஏற்படக்கூடாது என்பதற்காக சில கருத்துகளை முன்வைத்து முதல்வருக்குக் கடிதம் எழுதியிருந்தோம்.
தற்போது ‘ஒமைக்ரான்’ தொற்று பரவும் நிலையில் முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ‘ஒமைக்ரான்’ தொற்று தமிழகத்தில் அதிகரிக்கும் நிலையில் அதைத் தடுப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பாக பார்வையாளர்கள் அதிகம் கூடும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்குத் தடை விதிக்க வேண்டும். கோயில் திருவிழாக்கள், திரையரங்குகள், பொதுக்கூட்டங்கள், திருமண விழா மற்றும் துக்க நிகழ்வுகளில் பொதுமக்கள் அதிகம் கூடுவதைத் தடுக்க வேண்டும்.
பொதுமக்கள் முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்கி கண்காணிக்க வேண்டும். பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட வேண்டும். மருத்துவர்கள், மருத்துவத் துறை ஊழியர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்க வகை செய்ய வேண்டும்.
இரண்டாம் கட்ட கரோனா பரவலின் போது பயன்படுத்தபட்ட மருத்துவமனைகள், கோவிட்கேர் மையங்களில் தேவையான ஆக்சிஜன், பாதுகாப்புக் கவசங்கள், மருந்துகளைக் குறுகிய காலத்தில் அதிக அளவில் கிடைக்க வகை செய்ய வேண்டும் என்று முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் அறிவுறுத்திய இந்தக் கருத்துகள் தொடர்பாக முதல்வர் தலைமையில் நடைபெற்ற ‘ஒமைக்ரான்’ தடுப்பு நடவடிக்கை தொடர்பான கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால், ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவது பற்றி தமிழக அரசோ, மதுரை மாவட்ட நிர்வாகமோ எந்தவொரு அறிவிப்புகளையும் வெளியிடவில்லை. ‘ஒமைக்ரான்’ தொற்று பரவல் விகிதமும் அதன் தாக்கத்தைப் பொருத்தும்தான் நடப்பாண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடக்கும் எனத் தெரிகிறது.