சிவகங்கையில் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக மண்டல மையம் தொடக்க விழா நடந்தது. துணைவேந்தர் பார்த்தசாரதி தொடங்கி வைத்தார்.
மண்டல மைய இயக்குநர் சம்பத்குமார், மாணவர் உதவி மற்றும் சேவைப்பிரிவு இயக்குநர் மகேந்திரன், புலத் தலைவர்கள் தனலட்சுமி, ரவிமாணிக்கம், மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி முதல்வர் ஹேமலதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவுக்குப் பிறகு துணைவேந்தர் பார்த்தசாரதி கூறியதாவது: சிவகங்கை மையம் மூலம் சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பயன்பெறலாம். மேலும் தற்போது 50 குறுகிய கால சான்றிதழ் பட்டயப் படிப்புகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன. செவிலியர்களுக்கு மட்டுமே 10 படிப்புகளை கொண்டு வந்துள்ளோம். பாடங்களை ஆன்லைன் மூலம் கற்பிக்கிறோம். ஏற்கெனவே 81 இளநிலை, முதுநிலை படிப்புகள் உள்ளன என்றார்.
கல்வி என்பது வேலைக்கு மட்டும்தான் என்ற எண்ணம் உள்ளது. கல்வி என்பது அறிவை வளர்த்துக் கொள்வதுதான். ஜூலை முதல் ஜூன் வரை, ஜனவரி முதல் டிசம்பர் வரை என 2 கல்வியாண்டுகளாக பாடம் கற்பிக்கப்படுகிறது. தற்போது திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படிக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.