தமிழகம்

'சட்டம் தன் கடமையை செய்யும்' - புதுச்சேரி பாஜக நிர்வாகி கைது குறித்து அமைச்சர்  நமச்சிவாயம் கருத்து

செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: கொலை வழக்கில் புதுச்சேரி பாஜக இளைஞரணி செயலர் கைதான நிகழ்வு கருத்து தெரிவித்த அமைச்சர் நமச்சிவாயம், "சட்டம் தன் கடமையை செய்யும்" என்றார்.

புதுச்சேரி மாநில பாஜக தலைமை அலுவலகத்தில் மாநிலத்தலைவர் சாமிநாதனும், உள்துறை அமைச்சர் நமச்சிவாயமும் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். கரோனா தடுப்பு பணிகளில் புதுச்சேரி கவனம் செலுத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதே என்று நிபுணர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் நமச்சிவாயம் கூறுகையில், "கரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்த அரிசி உள்ளிட்ட பரிசுகள் தந்து ஊக்கப்படுத்தியுள்ளோம். வயதானவர்களுக்கு தடுப்பூசி போட தயக்கம் இருப்பதை போக்க முயற்சி நடைபெற்று வருகிறது. நூறு சதவீதம் தடுப்பூசி செலுத்திய மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்றார்.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பொறுப்பேற்று பல மாதங்களாகியும் டெல்லி செல்லவில்லையே என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் நமச்சிவாயம், "முதல்வர் டெல்லி செல்வதை அவர்தான் முடிவு எடுப்பார். அவரிடம்தான் கேட்கவேண்டும். அமைச்சர்கள் டெல்லி சென்று பல திட்டங்களை ஒவ்வொன்றாக புதுச்சேரிக்கு கொண்டு வருகிறோம்" என்றார்.

கொலை வழக்கில் பாஜக இளைஞரணி செயலர் கைதான நிகழ்வு கருத்து தெரிவித்த அமைச்சர் நமச்சிவாயம், "யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது கட்சி பாரபாட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். எக்கட்சியை சார்ந்தவராக இருந்தாலும் சட்டம் தன் கடமையை செய்யும்" என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் கூறும்போது, "கடந்த காங்கிரஸ் ஆட்சியில் நாராயணசாமி மட்டுமே டெல்லி சென்று மத்திய அமைச்சரை சந்திப்பார். அமைச்சர்கள் செல்லமாட்டார்கள். ஆனால் இப்போது புதுச்சேரி அமைச்சர்கள் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்தித்து பல்வேறு திட்டங்களை பெற்று வருகின்றனர். கரோனா தடுப்பூசியின் அடுத்தக்கட்டமாக 12 முதல் 18 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபடுத்த கமிட்டியை தயாராக வைக்க கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளது. இதற்காக கமிட்டிகள் உருவாக்கும் பணி நடைபெறுகிறது" என்றார்.

முன்னதாக, புதுச்சேரியில் பாம் ரவி, அவரது நண்பரை நாட்டு வெடிகுண்டு வீசி கொன்ற இரட்டை கொலை வழக்கில் பாஜக மாநில இளைஞரணி செயலர் விக்கி என்ற விக்னேஷை போலீஸார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT