தமிழகம்

ஸ்பா, மசாஜ் சென்டர்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்: உயர் நீதிமன்றம்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களில் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென டிஜிபிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் போலீஸ் ஸ்டேஷனுக்குட்பட்ட பகுதியில் உள்ள தனியார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தின் சட்ட ரீதியிலான நடவடிக்கைகளில் போலீஸார் தலையிடக் கூடாது என உத்தரவிடக் கோரி வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், ''தமிழகம் முழுவதும் உள்ள ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களுக்கு எதிராக புகார் வந்தால் மட்டுமே அங்கு சென்று ஆய்வு நடத்துவதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பா, ஆயுர்வேத சிகிச்சை தொடர்பான மசாஜ் சென்டர்களுக்கு எதிராகப் பல்வேறு குற்றச்சாட்டுகள் வருவதால் அங்கு சென்று போலீஸார் ஆய்வு செய்வதைத் தடுக்க முடியாது. அப்படித் தடுத்தால் குற்றங்கள் அதிகரிக்கக் காரணமாகிவிடும்.

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ளதுபோல தமிழகம் முழுவதும் உள்ள ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களில் சட்டவிரோதச் செயல்கள் நடைபெறாமல் தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த தமிழக டிஜிபி நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT