பள்ளி வகுப்பறைகள், கழிப்பறைகளை சுத்தம் செய்யும் பணியில் மாணவ, மாணவிகளை ஈடுபடுத்த கூடாது என்று மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த கீழ உரப்பனூரை சேர்ந்த ஆதிசிவன் என்பவரது மகன் சிவநிதி. திருமங்கலத்தில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் வகுப்பறையை சுத்தம் செய்யுமாறு வகுப்பு ஆசிரியர் கூறியதால், சிவநிதி அந்த பணியை செய்துள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக மேஜை விழுந்து, சிவநிதியின் கால்விரலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. வகுப்பறையை சுத்தம் செய்தபோது தனது மகன் காயமடைந்துள்ளதால், இது மனித உரிமை மீறல் என்று கூறி, மாநில மனிதஉரிமை ஆணையத்தில் ஆதிசிவன்புகார் கொடுத்தார்.
இந்த புகாரை விசாரித்த ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
சுத்தம் செய்ய போதுமான ஊழியர்களை நியமிக்காததற்கு பள்ளி நிர்வாகம்தான் காரணம். எனவே, பாதிக்கப்பட்ட மாணவனுக்கு இழப்பீடாக தமிழக அரசு 4 வாரங்களில் ரூ.1 லட்சம் வழங்க வேண்டும்.
எந்த பள்ளியிலும் வகுப்பறைகள், கழிப்பறைகளை சுத்தம் செய்யும் பணியில் மாணவ, மாணவிகளை ஈடுபடுத்த கூடாது. அவ்வாறு அவர்கள் ஈடுபடுத்தப்படவில்லை என்பதை பள்ளிக்கல்வி இயக்குநரகம் உறுதி செய்ய வேண்டும். இதுதொடர்பாக பள்ளிகளை கண்காணிக்குமாறு முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி இயக்குநரகம் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.