தமிழகம்

வேட்பாளர்கள் கட்சியில் சேர்ந்த நாள் முதல் சேர்த்துள்ள சொத்து விவரத்தை பட்டியலிடும் வகையில் விதிகளில் திருத்தம் கோரி வழக்கு: மத்திய அரசு, தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: வேட்பாளர்கள், கட்சியில் சேர்ந்த நாள் முதல் சேர்த்துள்ள அசையும் மற்றும் அசையா சொத்து விவரங்களை வெளிப்படையாக பட்டியலிடும் வகையில் தேர்தல் நடத்தைவிதிகளில் திருத்தம் கோரி தொடரப்பட்ட வழக்கில், தேர்தல் ஆணையம், மத்திய அரசு பதில் அளிக்கஉயர் நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது.

இதுதொடர்பாக வழக்கறிஞரும், அரசியல் பிரமுகரும், எழுத்தாளருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன், உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்திருந்த மனுவில் கூறியிருந்ததாவது:

சாதியும், கருப்பு பணமும்

நாடு முழுவதும் நடைபெறும் சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்கள் நேர்மையாகவும், நியாயமாகவும் ஜனநாயகத்தை நிலைநாட்டும் வகையிலும் நடைபெற வேண்டும் என தேர்தல் ஆணைய விதிமுறைகளில் உள்ளது. ஆனால் சாதியும், ஊழலும், கருப்பு பணமுமே நாடு முழுவதும் நடைபெறும் தேர்தல்களில் முக்கிய பங்காற்றி வருகிறது.

வாக்கை விலை கொடுத்து வாங்குவதும், அதை விற்பதும் வாடிக்கையாகி விட்டது. அரசியலில் முன்அனுபவம் இல்லாத திரைத்துறையினர் கூட திடீரெனஅரசியலில் நுழைந்து வாக்குகளைபெறுகின்றனர். ஊழல் நடைமுறைகளால் பொதுமக்கள், தேர்தல் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை இழக்க வைத்துள்ளது.

தேர்தல் நடைமுறைகள் மற்றும் விதிமுறைகளில் சட்டப்பூர்வமாக பல்வேறு மாற்றங்களையும், சீர்திருத்தங்களையும் கொண்டுவர வேண்டும். வேட்பாளர்கள் கட்சியில் சேர்ந்த நாள் முதல் சேர்த்துள்ள அசையும் மற்றும் அசையா சொத்து விவரங்களையும், நிதிநிலை இருப்பு மற்றும் வங்கி கடன் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் வெளிப்படையாகப் பட்டியலிடும் வகையில் தேர்தல் விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும்.

கடும் நடவடிக்கை தேவை

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி தவறான விவரங்களை வேட்புமனுவில் தெரிவிப்பவர்களுக்கு 6 மாத சிறைத் தண்டனை அளிக்க முடியும். எனவே வேட்புமனுவில் போதிய விவரங்களைத் தராதவர்கள் மீதும், தவறான விவரங்களைத் தருபவர்கள் மீதும் தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவர்களின் கல்வித்தகுதி, தொழில், வருமானம், குற்றப் பின்னணி குறித்தும் அதில் தெளிவாக விவரிக்க வேண்டும். ஒரு வேட்பாளர் அரசியல் கட்சியில் என்ன நோக்கத்துடன் இணைகிறார் என்றவிவரங்களையும் தெரிவிக்க வேண்டும். நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க மாட்டேன் என வேட்பாளர்கள் உத்தரவாதம் அளிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களின் சொத்து விவரங்களை வகைப்படுத்தி, அவை யாருடைய கட்டுப்பாட்டில் தற்போது உள்ளது என்பதைக் கண்காணிக்க வேண்டும். பொது நலனுக்காக அவர்கள் என்னசெய்துள்ளார்கள் என்பதை தெரிவிக்கவும் அறிவுறுத்த வேண்டும். இந்த தகவல்கள் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் தெளிவாக இருக்க வேண்டும்.

விகிதாச்சார பிரதிநிதித்துவம்

குறிப்பாக, நாடு முழுவதும் விகிதாச்சார பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும். இந்திரஜித் குப்தா கமிட்டி அறிக்கையின்படி வேட்பாளர்களுக்கான செலவை அரசே ஏற்க வேண்டும். ஆஸ்திரேலியாவில் உள்ளதுபோல எல்லாமாநிலத்துக்கும் சமமான பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும். அதேபோல சாதியும், கருப்பு பணமும் வாக்குகளை நிர்ணயம் செய்யக்கூடாது.

எனவே உண்மையான ஜனநாயகம் மலர, நியாயமான, நேர்மையான, ஊழலற்ற தேர்தல்களை நடத்துவதற்காக தேர்தல் நடத்தை விதிகளில் திருத்தங்களைக் கொண்டு வரவும், கொள்கை முடிவுஎடுக்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந் தார்.

இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.துரைசாமி மற்றும் ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன் ஆஜராகி வாதிட்டார். அதையடுத்து நீதிபதிகள், இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜன.27-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

நேர்மையாளராக இருக்க வேண்டும்

இதுதொடர்பாக வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கூறும்போது, ‘‘அரசியலில் நுழைபவர்கள் தூய்மையானவர்களாக, மக்களுக்கு நல்லது செய்யும் நேர்மையாளர்களாக இருக்க வேண்டும். ஆனால் தற்போதுள்ள அரசியல் சூழலில் இதற்கு தகுந்தார்போல சட்ட விதிகளோ, நடைமுறைகளோ இல்லை என்பதால் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தின் அனுமதியுடன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். உண்மையான ஜனநாயகம் மலர தேர்தல் நடைமுறைகளில் புதுமையான சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண் டும்’’ என்றார்.

SCROLL FOR NEXT