தமிழகம்

சுரப்பா விவகாரத்தில் ஆளுநர் தான் முடிவு எடுக்க முடியும்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

செய்திப்பிரிவு

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுரப்பா விவகாரம் தொடர்பாக தமிழக ஆளுநர்தான் முடிவு எடுக்க முடியும் என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தர் சுரப்பா, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறி, அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி பொன்.கலையரசன் தலைமையில் ஆணையம் அமைத்து முந்தைய அதிமுக அரசு உத்தரவிட்டது.

அதை எதிர்த்து சுரப்பா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதையடுத்து அந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அவர் மீது எந்தநடவடிக்கையும் எடுக்கக்கூடாது என உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி வி.பார்த்திபன் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமைவழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, இந்த விவகாரத்தில் பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில் ஆளுநர்தான் முடிவு எடுக்க முடியும். எனவே விசாரணை அறிக்கை ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது என்றார்.

அதையடுத்து நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை வரும் ஜன.3-ம் தேதிக்கு தள்ளி வைத் துள்ளார்.

SCROLL FOR NEXT