குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டுக்காக பல ஆக்கப்பூர்வமான திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், புத்தொழில் கலாச்சாரத்தை மேம்படுத்த, தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் (டான்சிம்) சார்பில் ‘டான்சீடு’ எனும் தமிழ்நாடு புத்தொழில் ஆதார மானிய உதவித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் புத்தொழில்முனைவோர், தங்கள் நிறுவனத்தின் ஆரம்ப நிலைகளை சிறப்பாக வடிவமைக்க, மானிய உதவியாக ரூ.10 லட்சம் வரை டான்சிம் நிறுவனம் வழங்குகிறது.
புத்தொழில் முனைவோருக்கான மானியம் வழங்கும் திட்டத்துக்காக நடப்பு நிதியாண்டில் ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை640 விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக பெறப்பட்டு, தீவிரதேர்வு செயல்முறை அடிப்படையில் உயர்நிலை நிபுணர் குழுவால் 19 புத்தொழில் நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டன.
இந்த நிறுவனங்களுக்கு மானியத் தொகையாக ரூ.10 லட்சம் வரை வழங்கும் வகையில், முதல் தவணையாக தலா ரூ.5 லட்சம் என மொத்தம் ரூ.95 லட்சத்துக்கான காசோலைகளை முதல்வர் ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.
நிகழ்ச்சியில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறைஅமைச்சர் தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலர் இறையன்பு, துறை செயலர் வி.அருண்ராய், டான்சிம் இயக்கக இயக்குநர் சிஜி தாமஸ் வைத்யன், தொழில் வணிக கூடுதல் இயக்குநர் ஏகாம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.