தமிழகம்

கே.டி.ராஜேந்திரபாலாஜி வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்க அனைத்து விமான நிலையங்களும் கண்காணிப்பு

செய்திப்பிரிவு

விருதுநகர்: போலீஸாரால் தேடப்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்க குடியேற்றப் பிரிவுக்கு லுக்அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

ஆவின் உள்ளிட்ட அரசு துறை நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் பணம் வாங்கி ரூ.3 கோடி வரை மோசடி செய்ததாக முன்னாள் பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரிராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் கடந்த வாரம் தள்ளுபடி செய்தது. அவரை பிடிக்க 8 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இதைத் ெதாடர்ந்து, முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் கே.டி.ராஜேந்திரபாலாஜி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற விடுமுறை காரணமாக இம்மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. இந்நிலையில், போலீஸாரால் தேடப்பட்டு வரும் ராஜேந்திரபாலாஜி வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதைத் தடுக்க குடியேற்றப் பிரிவுக்கு விருதுநகர் போலீஸார் ‘லுக்அவுட்’ நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

அதன்படி, நாட்டில் உள்ள அனைத்து பன்னாட்டு விமான நிலையங்களுக்கும் ராஜேந்திரபாலாஜி படம் மற்றும் அவரைப் பற்றிய விவரங்கள் அனுப்பப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT