கோவையில் நடைபெறும் புத்தக கண்காட்சியில், கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட அட்டைப் பெட்டி நிறைய புத்தகங்களை வாங்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சி யடைந்துள்ள தற்போதைய உலகில்,ஆன்லைன் வழியாக புத்தகங்களை பதிவிறக்கம் செய்து படிக்கும் வழக்கம் அதிகரித்து வந்தாலும், நேரடியாக புத்தகங்களை வாங்கி படிக்கும் வாசகர்களும் கணிசமான அளவில் உள்ளனர். இவர்களது வாசிப்புத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், இன்றும் பல்வேறு இடங்களில் புத்தகக் கண்காட்சிகள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன.
இதன் ஒருபகுதியாக, ‘கிதாப் லவ்வர்ஸ்’ சார்பில், கோவை அவிநாசி சாலை லட்சுமி மில் சிக்னல் அருகேயுள்ள மீனாட்சி அரங்கில், ‘‘லோட் தி பாக்ஸ்’ (பெட்டியை நிரப்புங்கள்) என்ற தலைப்பில் புத்தகக் கண்காட்சி நடந்து வருகிறது. புத்தகங்களின் மீதான ஆர்வம் வாசகர்களுக்கு குறையவில்லை என்பதை மெய்ப்பிக்கும் வகையில், இங்கு வாசகர்கள் திரண்டு தங்களுக்கு பிடித்த புத்தகங்களை தேடித் தேடி வாங்கி வருகின்றனர்.
புத்தகத்தின் விலையை கணக்கிடாமல், தொகை குறிப்பிடப்பட்ட அட்டைப் பெட்டி நிறைய புத்தகங்களை விற்பனை செய்வது இந்த கண்காட்சியின் சிறப்பம்சமாக உள்ளது.
இதுகுறித்து, கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளரும், இருப்பு மேலாளருமான ஆர்.கே.சங்கர் கூறும்போது,‘‘ வரும் 26-ம் தேதி வரை காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை புத்தக கண்காட்சி நடைபெறும். வாசிப்பு ஆர்வத்தை ஊக்குவிக்கவும், அதிக புத்தகத்தை வாங்கவும் ‘பிக் யுவர் ஃபாக்ஸ், ஃபில் இட் வித் புக்ஸ்’ (பெட்டியை எடுங்கள், புத்தகத்தை நிரப்புங்கள்) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளோம். இதன்படி, ரூ.2,750, ரூ.1,650, ரூ.1,100 என்ற மூன்று கட்டணங்களில் மூன்று வகை பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு பெட்டியின் அளவும் கட்டண அளவுக்கு ஏற்ப மாறுபடும். வாசகர்கள் தங்களுக்கு தேவையான பெட்டியை எடுத்துக் கொள்ளலாம். அரங்கில் 10-க்கும் மேற்பட்ட வரிசைகளில் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அதில் தங்களுக்கு தேவையானபுத்தகங்களை எடுத்து, பெட்டியில் அடுக்கிக் கொள்ளலாம். புத்தகங்கள் நிரம்பி விட்டால், அந்தப் பெட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டணத்தை மட்டும் செலுத்தி புத்தகத்தை வாசகர்கள் எடுத்துச் செல்லலாம்.
உதாரணத்துக்கு ரூ.2,750 மதிப்பிலான பெட்டியை எடுத்துச் செல்லும் வாசகர், அதில் ரூ.5 ஆயிரம் மதிப்புடைய புத்தகங்களை நிரப்பலாம். ரூ.2,750 மட்டும் செலுத்தினால் போதும். அதேநேரம் குறைந்த அளவுக்கு எடுத்தால், புத்தகத்துக்குரிய முழுக் கட்டணத்தையும் செலுத்தவேண்டும். இங்கு, கிளாசிக், கார்ட்டூன், திரில்லர், காமெடி, க்ரைம், வரலாறு, சிறுகதைகள், அறிஞர்கள் வாழ்வு போன்ற பல்வேறு வகைகளில், குழந்தைகள், சிறுவர்கள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற (ஆங்கிலம் மட்டும்) புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. வாசகர்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். குறைந்தபட்சம் ரூ.99 முதல் புத்தகங்கள் கிடைக்கும்’’ என்றார்.
இந்து தமிழ்திசை
இப்புத்தக கண்காட்சி அரங்கில், இந்து தமிழ்திசை பதிப்பகத்தின் புத்தகங்களும் இடம்பெற்றுள்ளன. அரங்கில் கிடைக்கப்பெறாத இந்து தமிழ்திசை பதிப்பு புத்தகங்கள் வேண்டுவோர் இங்கு ஆர்டர் செய்தும் பெற்றுக் கொள்ளலாம்.