தமிழகம்

மாமல்லபுரத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட விடுதி அறை முன்பதிவு செய்தவர்களுக்கே அனுமதி: செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தகவல்

செய்திப்பிரிவு

மாமல்லபுரம்: மாமல்லபுரம் மற்றும் ஈசிஆர் சாலையோர சொகுசு விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட, விடுதிகளில் அறை முன்பதிவு செய்திருந்தால் மட்டுமே ஈசிஆர் சாலையில் அனுமதிக்கப்படுவர் என செங்கை மாவட்ட எஸ்பி பி.அரவிந்தன் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் மற்றும் ஈசிஆர் சாலையோரங்களில் உள்ள சொகுசு விடுதிகளில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறும். கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையால், கடந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது பல்வேறு கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட அரசு அனுமதி வழங்கியுள்ளது. எனினும், கடற்கரைக்குச் செல்ல அனுமதியில்லை.

இந்நிலையில், புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்பாக காவல் துறை சார்பில் விடுதி நிர்வாகத்தினருடனான கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், எஸ்பி பி.அரவிந்தன் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல் ராஜூ பங்கேற்றனர்.

கூட்டத்தில் எஸ்பி அரவிந்தன் பேசியதாவது: புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக மாமல்லபுரம் வரும் நபர்கள், டிச. 31-ம் தேதி மாலைக்கு பின் விடுதிகளில் அறை முன்பதிவு செய்திருந்தால் மட்டுமே ஈசிஆர் சாலை மற்றும் மாமல்லபுரம் நகருக்குள் அனுமதிக்கப்படுவர். இதற்காக முட்டுக்காடு பகுதியில் போலீஸார் சோதனையில் ஈடுபடுவர்.

மேலும், விடுதிகளில் மட்டுமே கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டும். கடற்கரைக்குச் செல்ல அனுமதியில்லை. இரவு 1 மணிக்கு மேல் விடுதிகள் இயங்கக் கூடாது. மது அருந்திய நபர்கள் வாகனத்தை இயக்க அனுமதிக்கக் கூடாது. அவர்களுக்காக ஓட்டுநர்கள் நியமிக்க வேண்டும். அரசின் விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

SCROLL FOR NEXT