ஈரோடு மாவட்டம் கோபி அருகே 52 வயதான தந்தையும், அவரது மகனும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதினர்.
ஈரோடு மாவட்டம் கோபி பாரியூர் வெள்ளாளபாளையம் பிரிவு அரசு ஊழியர் குடியிருப்பைச் சேர்ந்தவர் வெ.குணசேகரன் (52). நெடுஞ்சாலைத்துறையில் சாலைப்பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது இரண்டாவது மகன் அ.கு.தமிழீழம் கோபி பாரதி வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.
குணசேகரன் 7-ம் வகுப்பு வரை மட்டுமே பள்ளியில் படித்தார். பின்னர் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார். இந்த நிலையில் அவருக்கு மீண்டும் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 2013-ல் 8-ம் வகுப்பு தேர்வு எழுதி, 243 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்தார். தொடர்ந்து சீனாபுரத்தில் உள்ள அவரது நண்பர் சுப்பிரமணியத்திடம் தனிப்பயிற்சி பெற்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினார். இவருடன் பொலவக்காளிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்த தமிழீழமும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதினார். இதில், மகன் தமிழீழம் 459 மதிப்பெண்ணும், தந்தை குணசேகரன் 234 மதிப்பெண்ணும் பெற்று தேர்ச்சியடைந்தனர்.
இந்த நிலையில் இந்த ஆண்டு தமிழீழம் தனது பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதினார். அவரைப் போலவே தானும் பிளஸ் 2 தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டுமென்பதற்காக குணசேகரன் பொதுத்தேர்வு எழுத தனித்தேர்வராக விண்ணப்பித்தார். நேற்று தொடங்கிய பிளஸ் 2 தேர்வினை கோபி குருகுலம் மேல்நிலைப்பள்ளியில் குணசேகரன் தேர்வு எழுதினார். இதுகுறித்து குணசேகரன் கூறும்போது, ‘என் மகனை விட அதிக மதிப்பெண் பெற முடியாது என்றாலும் தேர்ச்சி அடைவதற்கு தேவையான மதிப்பெண்களை பெற்றுவிடுவேன்’ என நம்பிக்கை தெரிவித்தார்.