சென்னை: நோய்களில் இருந்து மக்களை காக்கும் சித்த மருந்துகளை கண்டுபிடிக்க, கல்வி, ஆராய்ச்சியை மேம்படுத்த வேண்டும் என்று சென்னையில் நடந்த சித்தா தின விழாவில் மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் தெரிவித்தார்.
தேசிய சித்தா மையம் மற்றும்தமிழக அரசின் இந்திய மருத்துவம் - ஹோமியோபதி இயக்குநரகம் இணைந்து நடத்தும் 5-வது சித்தாதின விழா சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நேற்று நடந்தது. இதில், மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் கலந்துகொண்டு, விழா மலரை வெளியிட்டார். பின்னர், அவர் பேசியதாவது:
சித்த மருத்துவத்தின் தந்தையாக கருதப்படும் அகஸ்தியர் அவதரித்த மார்கழி மாதம் ஆயில்யநட்சத்திர தினம் (நேற்று) தேசியசித்த மருத்துவ தினமாக கொண்டாடப்படுகிறது. கரோனா பேரிடர் காலத்தில் சித்த மருத்துவம், சித்த மருத்துவர்களின் பங்களிப்பு மகத்தானது. பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின்படி, சித்த மருத்துவம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. உலக அளவிலும் சித்த மருத்துவம் வளர்ச்சி பெற்றுள்ளது. இதன்படி, சித்த மருத்துவத்தின் சந்தை மதிப்பு 18.1 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது.
பல்வேறு நோய்களில் இருந்துமக்களை காக்கும் சித்த மருந்துகளை கண்டுபிடிக்க, அதன் கல்வி,ஆராய்ச்சியை மேம்படுத்த வேண்டும். உணவே மருந்து என்பதே நம் வாழ்க்கை முறை. தினமும் யோகா செய்யுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய ஆயுஷ் இணை அமைச்சர் மகேந்திர முஞ்சபாரா பேசும்போது, ‘‘தமிழ் கலாச்சாரத்தின் ஆணிவேராக சித்த மருத்துவம் உள்ளது. அதை பலப்படுத்தும் வகையில் ஆயுஷ் அமைச்சகம் மூலம் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது’’ என்றார்.
தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசும்போது, ‘‘தமிழக முதல்வர் ஏற்கெனவே அறிவித்தபடி, சித்த மருத்துவபல்கலைக்கழகம் நிறுவுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. ஓரிரு மாதத்தில் இந்த பல்கலைக்கழகத்தை முதல்வர் திறந்து வைப்பார்’’ என்றார்.
இந்த நிகழ்ச்சியில் ஆயுஷ் துறை சிறப்பு செயலர் பிரமோத் குமார் பதக், தமிழகத்தின் இந்திய மருத்துவம் - ஹோமியோபதி இயக்குநரக இயக்குநர் எஸ்.கணேஷ், மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தின் தலைமை இயக்குநர் கே.கனகவல்லி உள்ளிட்டோரும் பேசினர்.