தமிழகம் முழுவதும் நேற்று நடந்த லோக் அதாலத்தில், பாதிக்கப் பட்டவர்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.139 கோடி வழங்கப் பட்டது. ஒரே நாளில் 12,767 வழக்கு களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நீதிமன்றங்களில் பல லட்சம் வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. இந்த வழக்குகளின் தேக்கத்தை குறைக்க உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதியும், தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயற்குழு தலைவருமான அனில் ஆர்.தேவ் உத்தரவுப்படி நாடு முழுவதும் லோக் அதாலத் எனும் மக்கள் நீதிமன்றங்கள் ஒவ்வொரு மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை தோறும் நடத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தி்ல் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவர் நீதிபதி கே.அக்னிஹோத்ரி மற்றும் சென்னை சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவர் நீதிபதி ஆர்.சுதாகர் தலை மையில் நேற்று மாநிலம் முழுவதும் லோக் அதாலத் நடந்தது.
மொத்தம் 63,190 வழக்குகள்
மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழு சார்பில் நேற்று நடந்த லோக் அதாலத்தில் உயர் நீதிமன்ற நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள் பங்கேற்று வழக்குகளை விசாரித்தனர்.
இதில் நிலுவையில் உள்ள மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்குகள், சிவில் வழக் குகள், வருவாய் உள்ளிட்ட இதர துறை சார்ந்த வழக்குகள் என மொத்தம் 63 ஆயிரத்து 190 வழக் குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள் ளப்பட்டன. மாநிலம் முழுவதும் நடந்த இந்த மக்கள் நீதிமன்றத்தில் பல்வேறு அரசு மற்றும் இன்சூரன்ஸ், வங்கிகள், பல்வேறு தனியார் துறை நிறுவனங்களும், பாதிக்கப்பட்ட நபர்களும் பங்கேற்றனர். வழக்கு தொடர்வதற்கு முந்தைய நிலையில் உள்ள பிரச்சினைகளுக்கும், நிலுவை யில் உள்ள வழக்குகளுக்கும் இந்த லோக் அதாலத்தில் தீர்வு காணப் பட்டது.
உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், எஸ்.விமலா, ஜி.சொக்கலிங்கம், முன்னாள் நீதிபதி எம்.சொக்கலிங்கம் ஆகியோர் தலைமையில் 4 அமர்வுகள் சென்னை உயர் நீதிமன்றத்திலும், நீதிபதி எஸ்.வைத்தியநாதன், முன்னாள் நீதிபதிகள் ஏ.ஆர்.ராமலிங்கம், பி.முருகேசன் ஆகியோர் தலைமையில் 3 அமர்வுகள் மதுரை கிளையிலும் என மொத்தம் 7 அமர்வுகள் வழக்குகளை விசாரித்தன.
235 நீதிபதிகள் விசாரணை
இதுபோல மாநிலம் முழுவதும் அந்தந்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதிகள் தலைமையில் உரிமை யியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றங் களில் 235 நீதிபதிகள் தலைமையிலான அமர்வு பிற வழக்குகளை விசாரித்தன. இவர்கள் தவிர ஓய்வு பெற்ற நீதிபதிகள் மற்றும் சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர்கள், மூத்த வழக்கறிஞர்களும் அமர்வில் அமர்ந்து பல்வேறு வழக்குகளுக்கு தீர்வு கண்டனர்.
இதுகுறித்து மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலர் ஆர்எம்டி டீக்காராமன் கூறியபோது, ‘‘இந்த லோக் அதாலத்தில் விசா ரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட மொத்த வழக்குகளில் 12,767 வழக்கு களுக்கு தீர்வு காணப்பட்டு, பாதிக்கப் பட்டவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை யாக சுமார் ரூ.139 கோடி வழங்கப் பட்டது’’ என்றார்.
மதுரை கிளையில் முதல்முறையாக லோக் அதாலத்தில் நில ஆர்ஜித வழக்குகளில் அதிகபட்சமாக ரூ.36 கோடிக்கு இழப்பீடுகள் வழங்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.