அமெரிக்காவில் இருந்து சேலம் வந்த பெண் பொறியாளர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சேலம் சூரமங்கலம் முல்லை நரைச் சேர்ந்த 24 வயது பெண் பொறியாளர் அமெரிக்காவில் இருந்து கடந்த 13-ம் தேதி விமானம் மூலம் சென்னை வந்தார். அங்கு அவருக்கு ஒமைக்ரான் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், அவர் சென்னையில் 4 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டார். பரிசோதனை முடிவு நெகட்டிவ் என வந்த நிலையில், மீண்டும் கடந்த 17-ம் தேதி அவரது சளி மாதிரி பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் சேலம் வந்தார்.
வீட்டில் 5 நாட்கள் தனிமையில் இருந்த நிலையில் அவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அவர் சேலம் அரசு மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு லேசான பாதிப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக சேலம் ஆட்சியர் கார்மேகம் கூறும்போது, “அமெரிக்காவில் இருந்து திரும்பிய பெண் பொறியாளருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. அவர் ஏற்கெனவே இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்தியுள்ளார்.
அவரது குடும்பத் தினருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்னும் பரிசோதனை முடிவு வரவில்லை. அவருடன் விமானத்தில் வந்த மற்ற பயணிகளுக்கும் தொற்று பாதிப்பு இல்லை” என்றார்.
இதனிடையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் நியூசிலாந்தில் இருந்து சேலம் வந்த 60 வயது ஆண் ஒருவர் ஒமைக்ரான் அறிகுறியுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டுள்ளார்.
அவரது ரத்த மாதிரி ஆய்வுக்காக சென்னை பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுக்கு பின்னரே அவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உள்ளதா என்பது தெரியவரும்.