உடுமலையில் சங்கர் கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தையை 7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலையில் கடந்த 13-ம் தேதி கலப்புத் திருமணம் செய்துகொண்ட காரணத்துக்காக, பொறியியல் கல்லூரி மாணவர் சங்கரையும் அவரது மனைவி கவுசல்யாவையும் மர்மக் கும்பல் தாக்கினர். இக்கொடிய சம்பவத்தில் சங்கர் படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் பெண்ணின் தந்தை சின்னச்சாமி திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். பின்னர் அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
மாஜிஸ்திரேட் முன்னிலையில்
இக்கொலை வழக்கில் அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்பதால் உடுமலை போலீஸார் அவரை கோவை மத்திய சிறைக்கு மாற்றக் கோரி மனுச் செய்திருந்தனர். அதன்படி நேற்று மதுரை மத்திய சிறையில் இருந்து அவரை போலீஸார் பலத்த பாதுகாப்புடன் உடுமலை நடுவர் நீதிமன்றம் எண் 1 மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
பின்னர், 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க மாஜிஸ்திரேட் அனுமதியளித்தார். அதைத் தொடர்ந்து அவரை உடுமலை போலீஸார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘சங்கர் படுகொலை சம்பவம் குறித்த அவரது வாக்குமூலம் பெறப்படும்’ என்றனர்.