வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ | கோப்புப்படம். 
தமிழகம்

"தொகுதி மேம்பாட்டு நிதியில் எதைச் செயல்படுத்தலாம்?" - வாட்ஸ்அப் மூலம் கோவை தெற்கு மக்களிடம் கேட்கும் வானதி

க.சக்திவேல்

கோவை: "தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கோவை தெற்கு தொகுதியில் என்னென்ன திட்டங்களை செயல்படுத்தலாம் என ஆலோசனைகள், கோரிக்கைகளை வாட்ஸ்அப் மூலம் மக்கள் தெரிவிக்கலாம்" என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் வானதி சீனிவாசன். இவர் பாஜக தேசிய மகளிரணி தலைவராகவும் பாஜகவின் முக்கிய பொறுப்பில் உள்ளார். அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோவை தெற்கு தொகுதி மேம்பாட்டுக்காக அரசால் ஒதுக்கப்பட்ட தொகையைக் கொண்டு தொகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகள், சீரமைப்புப் பணிகளை செய்ய முடிவு செய்துள்ள வானதி சீனிவாசன், இதுகுறித்து இதுகுறித்து அப்பகுதியில் வாழும் மக்களிடமே கருத்து கேட்பதென முடிவு செய்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "தமிழக அரசால் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியாக கோவை தெற்கு தொகுதிக்கு ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த நிதியின் வரையறைகளுக்கு உட்பட்டு சில பணிகளை நிறைவேற்றலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தமிழக அரசால் நடத்தப்படும் கல்விக் கூடங்கள், அங்கன்வாடி, மதிய உணவு மையம், மருத்துவமனைகள், கால்நடை மருத்துவமனைகள், உடற்பயிற்சிகூடங்கள் ஆகியவற்றுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தலாம். ஆதிதிராவிடர், கள்ளர் மறுவாழ்வு பள்ளிகள், மனநலம் பாதித்த சிறுவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வாங்கலாம். உயர் கோபுர மின்விளக்குகள், தார், கப்பி சாலைகளை விதிமுறைக்கு உட்பட்டு அமைக்கலாம்.

மாநில போக்குவரத்துத் துறைக்கு வரையறுக்கப்பட்ட பணிகளை செய்யலாம். அரசு திட்டத்தின்கீழ் கடந்த 2000-ம் ஆண்டுவரை கட்டப்பட்ட வீடுகள், இந்திரா ஆவாஸ் யோஜனா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்ட வீடுகளை பழுதுபார்த்தல், உட்கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்கலாம். நேரடி கொள்முதல் நிலையம், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம், பால் குளிரூட்டும் மையம் கட்டலாம். இந்த பணிகளை தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் செய்ய பொதுமக்கள் தங்கள் கருத்துகள், ஆலோசனைகளை 7200331442 என்ற வாட்ஸ்அப் எண்ணில் அனுப்பலாம்" என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

SCROLL FOR NEXT