புதுச்சேரி மாநிலத்தில் மின் துறையை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து காரைக்காலில் மாவட்ட ஆட்சியரகம் நோக்கி பேரணியாக சென்ற மின் துறை ஊழியர்கள், ஆதரவு தெரிவித்து கலந்து கொண்ட எம்.எல்.ஏக்கள் 
தமிழகம்

தனியார்மயத்துக்கு எதிர்ப்பு: காரைக்காலில் மின் ஊழியர்கள் பேரணி- ஆதரவாக எம்.எல்.ஏக்கள் பங்கேற்பு

செய்திப்பிரிவு

காரைக்கால்: காரைக்கால் மின் துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து காரைக்காலில் மின் துறை ஊழியர்கள் இன்று (டிச.23) மாலை போராட்டப் பேரணி நடத்தினர்.

புதுச்சேரி மாநிலத்தில் மின் துறையை தனியார் மயமாக்க மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு மின் துறை ஊழியர்கள் எதிர்ப்புத் தெரிவித்து தொடர்ந்து பலகட்டப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய அரசின் முடிவைக் கண்டித்தும், அதைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், மாநில அரசு இம்முடிவை ஏற்கக் கூடாது என்று கூறியும் மின்துறை ஊழியர்கள், பொறியாளர்கள் காரைக்கால் மதகடி அரசலாற்றுப் பாலம் அருகிலிருந்து, மாவட்ட ஆட்சியரகம் நோக்கி பேரணியாகச் சென்று எதிர்ப்பை பதிவு செய்தனர்.

மின் துறை தனியார்மய எதிர்ப்பு போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் பழனிவேல் தலைமை வகித்தார். சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.எம்.எச்.நாஜிம், பி.ஆர்.சிவா, எம்.நாக தியாகராஜன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஆர்.பி.சந்திரமோகன் ஆகியோர் ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டனர்.

போராட்டம் குறித்து ஊழியர்கள் கூறியது: "மின் துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டுள்ளது. மின் துறை தனியார்மயமானால் ரூ.1,200 கோடி சொத்துகள் தனியாருக்கு சென்றடைந்துவிடும். வீட்டு உபயோக மின் கட்டணம் பல மடங்கு உயர்ந்துவிடும். விவசாயத்துக்கான இலவச மின்சாரம் நிறுத்தப்படும். மின் நுகர்வோருக்கு பலவேறு பாதிப்புகள் ஏற்படும். இதனால் இம்முடிவை கைவிட வலியுறுத்தி பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம்" என்றனர்.

SCROLL FOR NEXT