கரூர்: கரூரில் காணாமல் போன நாய்க்குட்டியை சமூக வலைத்தளம் மூலம் கண்டறிந்து இளைஞர் ஒருவர் மீட்ட சம்பவம் நெகிழ்வை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் 5 ரோடு பகுதியில் பிரியாணி கடை நடத்தி வருபவர் சதீஷ்குமார். இவர் தனது அக்கா மகளுக்காக மயிலாடுதுறையில் இருந்து பக் வகை நாய்க்குட்டியை ரூ.25,000-க்கு ஒரு மாதத்திற்கு முன் வாங்கி கொடுத்துள்ளார். அதற்கு ஜோயோ என பெயர் சூட்டியுள்ளார். அக்கா மகளின் படிப்புக்கு ஜோயோ இடைஞ்சலாக இருந்ததால் கடந்த சில நாட்களுக்கு முன் ஜோயோவை சதீஷ்குமார் எடுத்து வந்து அவருடன் வைத்துக்கொண்டார்.
சதீஷ்குமார் அண்மையில் ஜோயோவை பிரியாணி கடைக்கு அழைத்து சென்றுள்ளார். வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் ஜோயோவை இரு சக்கர வாகனத்தில் விட்டுவிட்டு சென்றுள்ளார். திரும்பி வந்தப்போது ஜோயோவை காணவில்லை. அங்கு தேடியும் ஜோயோ கிடைக்காததால் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காமராக்கள் பதிவு மூலம் தேடியும் விவரம் தெரிவில்லை.
சதீஷ்குமார் முகநூல், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் ஜோயோ காணாமல் போனது குறித்தும், தகவல் அளிப்பவர்களுக்கு உரிய சன்மானம் அளிக்கப்படும் என அறிவித்தார். அவரது நண்பர்களுக்கு இப்பதிவினை அனுப்பி அவர்களையும் பகிர கேட்டுக்கொண்டார். இந்நிலையில், செங்குந்தபுரம் பகுதியில் உள்ள ஒரு ஜவுளி உற்பத்தி நிறுவனத்தில் ஜோயோ இருப்பதாக சதீஷ்குமாரின் நண்பர் நேற்றிரவு வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பினார்.
இதையடுத்து சதீஷ்குமார் அங்கு சென்று ஜவுளி உற்பத்தி நிறுவன உரிமையாளரிடம் ஜோயோவை திரும்ப ஒப்படைக்கக் கேட்டுள்ளார். ஆனால், அவரோ தான் பணம் கொடுத்து வாங்கியுள்ளதால் தர முடியாது என மறுத்துள்ளார். இதையடுத்து, சதீஷ்குமாரை கண்ட ஜோயோ வாலை ஆட்டிக்கொண்டு மகிழ்வுடன் அவரை நோக்கி துள்ளிக் குதித்து வந்துள்ளது. இதனைக் கண்ட ஜவுளி உற்பத்தி நிறுவன உரிமையாளரோ ஜோயோவை சதீஷ்குமாரிடம் ஒப்படைத்துள்ளார்.
சமூக வலைத்தளம் மூலம் காணாமல் போன நாய்க்குட்டியை கண்டு பிடித்த நிலையில், நாயின் அன்பால் அதன் உரிமையாளரிடம் திரும்ப வந்த சம்பவம் நெகிழ்வை ஏற்படுத்தியுள்ளது