தமிழகம்

திருச்சி காந்தி மார்க்கெட்டில் 7 கடைகள் தீயில் எரிந்து நாசம்

ஜெ.ஞானசேகர்

திருச்சி: திருச்சி காந்தி மார்க்கெட்டுக்கு வெளியே இன்று காலை டீ கடையில் சிலிண்டர் வெடித்து நேரிட்ட தீ விபத்தில் 7 கடைகள் தீயில் எரிந்து நாசமாயின.

திருச்சி காந்தி மார்க்கெட்டை சுற்றிலும் சாலையோரம் ஏராளமான கடைகள் உள்ளன. இந்த நிலையில், மார்க்கெட்டின் பிரதான நுழைவுவாயிலின் இடது பகுதியில் உள்ள டீ கடையில் இன்று காலை சிலிண்டர் வெடித்து தீப்பற்றியது. தொடர்ந்து, அடுத்தடுத்த கடைகளுக்கும் தீ பரவியதில் செல்போன் கடை, ஜூஸ் கடை, பெட்டிக் கடை என மொத்தம் 7 கடைகள் தீயில் கருகி நாசமாயின.

லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பில் சேதம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இந்த தீ விபத்தில் லேசான காயமடைந்த டீ கடை ஊழியர் பரமசிவம், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தகவலறிந்த சட்டப்பேரவை திருச்சி கிழக்குத் தொகுதி உறுப்பினர் எஸ்.இனிகோ இருதயராஜ், தீ விபத்து நேரிட்ட இடத்தைப் பார்வையிட்டு வியாபாரிகளுக்கு ஆறுதல் கூறினார்.

காஸ் சிலிண்டரை மாற்றும்போது கசிவு நேரிட்டு இந்த தீ விபத்து நேரிட்டதாக தீயணைப்புத் துறையினர் கூறினர். இந்த விபத்து குறித்து காந்தி மார்க்கெட் போலீஸார் விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT