திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் தரமற்ற முறையில் உள்ள 168 கட்டிடங்கள் இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மாநில பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.
திருநெல்வேலி சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் இன்று திருநெல்வேலிக்கு வந்து உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
அத்துடன் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மாணவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார். இதைத் தொடர்ந்து திருநெல்வேலி வண்ணார்பேட்டையிலுள்ள தரமற்ற நிலையிலிருந்த மாநகராட்சி நடுநிலைப்பள்ளி கட்டிடத்தை இடிக்கும் பணிகளை பார்வையிட்டார். அத்துடன் பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் ஆய்வு செய்தார்.
பின்னர் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மண்டல அளவிலான பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் பங்கேற்றார். கூட்டத்துக்குப்பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:
”சமீபத்தில் நடைபெற்ற விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு என்னதான் ஆறுதல் கூறினாலுல். போன உயிர் போனது தான். இனிமேல் இதுபோன்ற இழப்பு யாருக்கும் ஏற்படக்கூடாது என்பதை மையமாக வைத்து எங்களது செயல்பாடுகள் இருக்கும். கல்வித்துறை அதிகாரிகள் கூட்டத்திலும் இது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பள்ளிகளின் தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் தரமற்ற முறையில் உள்ள 168 கட்டிடங்கள் இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடங்களை ஏன் இவ்வளவு நாள் ஆய்வு செய்யவில்லை என்ற கேள்வி எழுவது நியாயம்தான். ஆனால் கடந்த ஆகஸ்ட் முதல் இந்த ஆய்வு நடைபெற்று வருகிறது. இருப்பினும் இச்சம்பவம் துரதிஷ்டவசமாக நடைபெற்று விட்டது உள்ளபடியே வேதனை அளிக்கிறது. பள்ளிகளை இடிக்கும்போது மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதிக மாணவர்கள் படிக்கும் பள்ளியில் இடைவேளை நேரத்தை மாற்றி அமைப்பது குறித்து உரிய ஆய்வுக்கு பிறகு நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் தொங்கி வந்தால் ஓட்டுநர் நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளிகளுக்கு நாளை மறுநாள் முதல் வரும் ஜனவரி 2-ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அளிக்கப்படுகிறது.
அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் என்பது அரசின் விருப்பம்தான். ஆனால் கல்வித்துறை தொடர்பாக நீதிமன்றத்தில் 13 ஆயிரம் வழக்குகள் இருக்கின்றன. வழக்குகளுக்கு உரிய தீர்வு காணப்பட்டதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று ஓர் அண்ணனாக இருந்து நான் பார்த்து கொள்வேன்” என்று தெரிவித்தார்.
ஆய்வு கூட்டத்தில் தமிழக சட்டப்பேரவை தலைவர் மு. அப்பாவு, அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதாராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.