கரூர்: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நெருங்கிய நண்பரும், மொழிப்போர் தியாகியுமான கவண்டம்பட்டி முத்து இன்று (டிச.23) காலமானார். அவருக்கு வயது 97.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள கவண்டம்பட்டியைச் சேர்ந்தவர் முத்து. தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நெருங்கிய நண்பரும், நங்கவரம் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவரும், மொழிப்போர் தியாகியுமான முத்து வயது முதிர்வு காரணமாக இன்று அதிகாலை கவண்டம்பட்டியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
திருச்சி மாவட்டமும் தற்போதைய கரூர் மாவட்டமுமான குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி முதல்முறையாக கடந்த 1957ம் ஆண்டு போட்டியிட்டு வெற்றிப்பெற்று எம்எல்ஏவானார். அப்போது நடந்த நங்கவரம் பண்ணையார்களுக்கு எதிரான போராட்டம் கருணாநிதியின் அரசியல் வாழ்க்கையில் மிக முக்கியமானதாகும்.
திருச்சி மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவராக அப்போது இருந்த முத்து, பண்ணையாருக்கு எதிராகக் குரல் கொடுத்துவந்தார். இதுகுறித்து அறிந்த அண்ணா, கருணாநிதி தலைமையில் போராட்டம் நடைபெறும் என அறிவித்தார். இந்தப் போராட்டத்தில் பங்கேற்க பெருகமணி ரயில் நிலையத்தில் வந்திறங்கிய கருணாநிதியை முத்து தலைமையில் ஏராளமானோர் வரவேற்க திரண்டனர். மேலும், சைக்கிளில் வைத்து கருணாநிதியை ஊர்வலமாக அழைத்து சென்றனர்.
போராட்டம் காரணமாக கருணாநிதி, முத்துவுக்கு இடையோன நெருக்கம் அதிகரித்தது. போராட்டம் தீவிரமடைந்தது. போராட்ட நெருக்கடி காரணமாக அவரவர் உழுத நிலம் அவர்களுக்கே சொந்தம் என்ற அடிப்படையில் விவசாயிகளுக்கே நிலம் கிரயம் செய்யப்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தில் கருணாநிதி, அன்பில் தர்மலிங்கம், திருச்சி மாவட்ட ஆட்சியர் மலையப்பன் ஆகியோருடன் கவண்டம்பட்டி முத்துவும் கையெழுத்திட்டார். மேலும் மொழிப் போராட்டத்திலும் பங்கேற்றுள்ளார்.
முத்துவுக்கு அறிவழகன், அண்ணாதுரை, கருணாநிதி, தமிழ்வாணன், அன்பழகன் என 5 மகன்கள் உள்ளனர். இதில் அண்ணாதுரை செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றி வருகிறார்.