பாஜகவின் அங்கம் இல்லாமல் தமிழகத்தில் ஆட்சி அமையாது என மத்திய இணை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழக தேர்தல் நிலவரம் குறித்து சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பொன்.ராதாகிருஷ்ணன், "பாஜக வேட்பாளர் பட்டியல் தயாராக இருக்கிறது. எங்களது பட்டியலை மேலிடத்தில் கொடுத்துவிடுவோம். அதன் மீதான இறுதி முடிவு அகில இந்திய தலைமை எடுக்கும். கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்துவருகிறது. பாமகவுடன் இதுவரை பேசவில்லை.
தமிழகத்தில் 50 ஆண்டுகளாக திமுக மற்றும் அதிமுக ஆண்டுக் கொண்டிருக்கின்றன. கருணாநிதி 5 முறை முதலமைச்சராக இருந்திருக்கிறார். அவரால்கூட முழுமையாக எல்லா கட்சிகளையும் இணைக்க முடியவில்லை. தற்போது ஆண்டுக் கொண்டிருக்கும் அதிமுகவால் கூட முடியவில்லை. திமுக, அதிமுக தனித்துவிடப்பட்டதாக விமர்சிக்காதவர்கள் பாஜகவை மட்டும் ஏன் அப்படி விமர்சிக்க வேண்டும். எனவே, திமுக, அதிமுக இரண்டுமே பெரும்பான்மை கட்சியா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
இங்கு, வசதிபடைத்த கட்சிகள் சந்தையில் பிற கட்சியை வாங்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால், பாஜகவின் அங்கம் இல்லாமல் தமிழகத்தில் வருகின்ற ஆட்சி அமையாது" என்றார்.