தனுஷ்கோடியில் அமைய உள்ள புதிய ரயில் நிலையத்தின் மாதிரி படம். 
தமிழகம்

டிசம்பர் 23 புயலால் தனுஷ்கோடி அழிந்த 57-வது ஆண்டு நினைவு தினம்; ராமேசுவரம் - தனுஷ்கோடி இடையே மீண்டும் ரயில் பாதை: பீனிக்ஸ் பறவை போல புத்துயிர் பெறுகிறது

எஸ். முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: பரபரப்பாக இயங்கும் ரயில் நிலையம், அதனருகேயே துறைமுகம், நிரம்பி வழியும் சுற்றுலாப் பயணிகள், இருபுறமும் கடல், அதில் எந்நேரமும் மீன்களைப் பிடிக்கும் மீனவர்கள். இவையெல்லாம் தனுஷ்கோடியின் முந்தைய அடையாளங் கள்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்பாம்பன் ரயில் பாலம் கட்டப்பட்டு,1914 பிப். 24-ம் தேதி போர்ட் மெயில் ரயில் சேவை தொடங்கப்பட்டது. இதன் மூலம் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து ஒரே டிக்கெட்டில் தனுஷ்கோடிக்கு ரயிலில் சென்று, அங்கிருந்து கப்பல் மூலம் தலைமன்னாருக்கும், பின்பு மீண்டும் ரயிலில் கொழும்பு வரையிலும் சென்றனர். 1964 டிச.23-ல்தனுஷ்கோடியை புயல் தாக்கியதில் ரயில் நிலையமும், துறைமுகமும் ஆயிரக்கணக்கான மக்களுடன் அழிந்து போனது.

புயல் தாக்கி 54 ஆண்டுகளுக் குப் பிறகு ராமேசுவரத்தில் இருந்துதனுஷ்கோடி வரை 17.20 கி.மீ தொலைவுக்கு புதிய ரயில் பாதை திட்டத்துக்கு கன்னியாகுமரியில் 1.3.2019 அன்று நடந்த நிகழ்ச்சியில் காணொலி மூலம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து சென்னை ஐஐடியைச் சார்ந்த பொறியாளர்கள் ஆய்வு செய்து, தனுஷ்கோடிக்கான ரயில் பாதையை வெள்ளத்தில் இருந்து பாதுகாக்க சாலை மட்டத்தில் இருந்து 7 மீட்டர் உயரத்தில் அமைக்க பரிந்துரைத்தனர். 1964-ல்புயல் தாக்கியபோது அப்போதையரயில் தண்டவாளங்கள் ஒரு மீட்டருக்கும் குறைவான உயரத்திலேயே இருந்தது. இதனால் தற்போது இத்திட்டத்துக்கான நிதி ரூ.208 கோடியில் இருந்து சுமார் ரூ.700 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்டு 2 ஆண்டுகளாக தனுஷ்கோடிரயில் பணிகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், தற்போது ரயில் பாதை அமைய உள்ள இடங்களான கோதண்டராமர் கோவில், முகுந்தராயர்சத்திரம், கம்பிபாடு ஆகிய இடங்களில் முதல்கட்ட பணியாக, சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி தொடங்கியுள்ளது.

மேலும் சமீபத்தில் தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்துத் தொடங்குவது குறித்து இந்திய - இலங்கைவெளியுறவு மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதும் குறிப்பிடத் தக்கது.

பீனிக்ஸ் பறவை போல் தனுஷ்கோடி மீண்டும் எழுவதால் தென் கடலோர மாவட்டங்கள் பொருளாதாரரீதியாக வளர்ச்சி பெறும்என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள் ளது.

SCROLL FOR NEXT