நிலநடுக்கத்தை முன்கூட்டியே அறிவித்து எச்சரிக்கை செய்யும் கருவியை தனியார் நிறுவனத்தினர் சென்னையில் நேற்று அறிமுகம் செய்தனர்.
அவசரகால நிலநடுக்க எச்சரிக்கை கருவியை டெல்லி யைச் சேர்ந்த டெரா டெக்காம் நிறுவனம், ஜெர்மனி யைச் சேர்ந்த செக்டி எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ளது. இதன் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது.
டெரா டெக்காம் நிறுவன நிர்வாக இயக்குநர் பிஜேந்தர் கோயல் இந்த கருவி குறித்து கூறியதாவது:
உலக அளவில் நிலநடுக்கத்தை முன்கூட்டியே உணர்ந்து எச்சரிக்கை செய்வதோடு பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் வகையில் இந்த கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. 100 ஆண்டுகளுக்கும் மேலான தொடர் ஆய்வுக்கு பின்னர் இந்த கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனம் நிலநடுக்கத்தின்போது ஆரம்பக் கட்ட அலைகளை மிகத் துல்லியமாக கணித்து எச்சரிக்கை அலாரத்தை ஒலிக்கச் செய்யும். 2006-லிருந்து இந்த கருவி பயன்பாட்டில் உள்ளது. உலகில் 25 நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது. ஒருமுறை கூட தவறாக எச்சரிக்கை கொடுத்ததில்லை. சிலி நாட்டில் 2010-ம் ஆண்டு 30 விநாடிகளுக்கு முன்பு எச்சரிக்கை அலாரம் ஒலித்து பல ஆயிரம் உயிர்களை காப்பாற்றியது.
இந்தியாவில் இப்போதுதான் முதன்முறையாக இந்த கருவி அறிமுகப்படுத்தப்படுகிறது. சென்னை தரமணியில் உள்ள மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி நிறுவனத்தில் பரிசோதித்ததில் வெற்றிகரமான முடிவுகளை கொடுத்தது. ஹரியாணா மாநில அரசு தனது துணை தலைமைச் செயலகத்தில் இந்த கருவியை பொருத்த முடிவு செய்துள்ளது.
நிலநடுக்க காலங்களில் இந்த கருவி எச்சரிக்கை அலாரம் ஒலிப்பதுடன் மின்சாரம், சமையல் எரிவாயு, தண்ணீர் விநியோகம், லிப்ட் இயக்கம் ஆகியவற்றை நிறுத்திவிடும். மேலும், அவசரகால கதவுகளை திறந்துவிடும். இதனால் பேராபத்து நிகழாமல் தவிர்க்கலாம். பெரிய கட்டிடங்கள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடும் இடங்களில் இந்த கருவியை பொருத்தலாம். இதன் விலை ரூ.30 லட்சம். நிலநடுக்கம் ஏற்படுவதை 8 முதல் 15 விநாடிகளுக்கு முன்பு தெரிவிக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பேட்டியின்போது ஜெர்மனியின் செக்டி எலெக்ட்ரானிக்ஸ் நிறுவன நிர்வாகி ஜூர்ஜென் பிஸிபெலாக் உடனிருந்தார்.