தமிழகம்

தொழிலாளர் நலச் சட்டங்கள் தொடர்பான நிலுவை வழக்குகளை விரைவாக முடிக்க வேண்டும்: அமைச்சர் சி.வி.கணேசன் அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: தொழிலாளர் நலச் சட்டங்கள் தொடர்பான நிலுவை வழக்குகள் உள்ளிட்ட அனைத்து வழக்குகளையும் விரைவாக முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள் தமிழ்நாடு தொழிலாளர் நலவாரியக் கருத்தரங்கு கூடத்தில், தொழிலாளர் நலத் துறை அலுவலர்களுக்கான பணித் திறனாய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

நலத்திட்ட உதவிகள்

இந்தக் கூட்டத்துக்கு தலைமைவகித்து தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன்பேசியதாவது:

திமுக அரசு பொறுப்பேற்றது முதல் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

தொழிலாளர் நலத் துறையின்கீழ் இயங்கும் 18 அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள் மூலம் வழங்கப்பட்டு வரும்உதவிகள், வாரிய உறுப்பினர்களுக்கு விரைவாகச் சென்றுசேர உரிய நடவடிக்கைகள மேற்கொள்ள வேண்டும்.

தொழிலாளர் நலத்துறையால் மேற்கொள்ளப்படும் சமரசப் பணிகள், நீதிசார் பணிகள், சட்டஅமலாக்கப் பணிகள் தொடர்பாக நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல, தொழிலாளர் நலச் சட்டங்கள் தொடர்பானவழக்குகளையும் விரைவாக முடிக்க வேண்டும். தொழிலாளர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

இந்தக் கூட்டத்தில், தொழிலாளர் நலத் துறைச் செயலர் கிர்லோஷ்குமார், தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT