தமிழகம்

கிருஷ்ணகிரியில் டாஸ்மாக் கடைகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்ட 75 மேற்பார்வையாளர்கள் சஸ்பெண்ட்

எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்ட 75 மேற்பார்வையாளர்களை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் காலி மதுப்பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, காலி மதுப்பாட்டில்களை ஒப்படைப்பவர்களுக்கு 10 ரூபாய் வழங்கப்படுகிறது. இதற்காக மதுபானத்தின் விலையுடன் கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கவும், அதே போல் 1,000 ரூபாய்க்கு மேல் மதுபானம் வாங்குவோரிடம் கியூஆர் குறியீடு மூலம் பணமில்லா பரிவர்த்தனை மேற்கொள்ளவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

காலி மதுப்பாட்டில்களை திரும்பப் பெறும்போது அவற்றை ஸ்கேன் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், ஒரு கடைக்கு 2 ஸ்கேனிங் இயந்திரங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதால், புதிய நடைமுறைகளால் விற்பனையில் காலதாமதம் ஏற்படுவதுடன், பணியாளர்களின் பணிச்சுமையும் அதிகரிப்பதாக ஊழியர்கள் குற்றம்சாட்டினர்.

காலி மதுப்பாட்டில்களை திரும்பப் பெறும் பணிக்கு தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் பணியாளர்களை நியமிக்க வேண்டும், கூடுதல் ஸ்கேனிங் இயந்திரங்கள் வழங்க வேண்டும். பணி பாதுகாப்பு, பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் கடந்த 2 நாட்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 110 கடைகளில் பணியாற்றும் 387 பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் டாஸ்மாக் மேலாளர் செங்கீஸ்கான் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர், நேற்று முன்தினம் 110 மேற்பார்வையாளர்களுக்கும், நேற்று 25 மேற்பார்வையாளர்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இதனிடையே நேற்று இரவில், 75 மேற்பார்வையாளர்களை டாஸ்மாக் நிர்வாகம் சஸ்பெண்ட் செய்திருக்கிறது.

இன்று வழக்கம் போல், கடைகள் திறக்காவிட்டால், மீதமுள்ள கண்காணிப்பாளர்கள், விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக டாஸ்மாக் நிர்வாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. மேற்பார்வையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்குதல், சஸ்பெண்ட் நடவடிக்கைகள் ஆகியவை தவெக அரசின் மீது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக டாஸ்மாக் ஊழியர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT