தமிழகம்

சிவகாசியில் அச்சக உரிமையாளர் வீட்டில் 75 பவுன் நகை திருட்டு: முகமூடி அணிந்த கொள்ளையர்கள் கைவரிசை

அ.கோபால கிருஷ்ணன்

சிவகாசி: சிவகாசி ஐயப்பன் காலனியில் அச்சக உரிமையாளர் நேற்று முன்தினம் இரவு ஹோட்டலுக்கு சாப்பிடச் சென்றபோது முகமூடி அணிந்து வந்த திருடர்கள் 75 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றனர். திருடர்கள் வீட்டிற்குள் இருக்கும்போது உரிமையாளர் திரும்பி வந்ததால் கத்தியை காட்டி மிரட்டி விட்டு தப்பி ஓடினர்.

சிவகாசி ஐயப்பன் காலனியைச் சேர்ந்தவர் அரவிந்த் ராம் (40). இவர் சிவகாசியில் உழவர் சந்தை பகுதியில் அச்சகம் மற்றும் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். நேற்று இரவு அரவிந்த்ராம், மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டைப் பூட்டி விட்டு ஹோட்டலுக்கு சாப்பிடச் சென்றார். இரவு 11.45 மணி அளவில் அரவிந்த் ராம் குடும்பத்தினர் உடன் வீடு திரும்பினார்.

அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்த நிலையில், வெளியே நின்றிருந்த காரில் ஹாரன் அடித்ததால் வீட்டில் இருந்து முகமூடி அணிந்த 3 பேர் கையில் அரிவாள் உடன் வெளியே வந்துள்ளனர். அரவிந்த் ராம் திருடர்களைப் பிடிக்க முயன்ற போது, அரிவாளை காட்டி மிரட்டியபடி காரில் தப்பிச் சென்றனர். வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 93 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் பணம் திருடப்பட்டு இருந்தது.

தப்பி ஓடும் போது வீட்டு வாசல் மற்றும் தெருவில் 18 பவுன் நகைகள் கீழே விழுந்து விட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விருதுநகர் தடய அறிவியல் துறையினர் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. சம்பவ இடத்தில் மதுரை சரக டிஐஜி அபிநவ் குமார், எஸ்பி கவுதம் கோயல் ஆகியோர் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிவகாசி நகர் காவல் நிலைய போலீஸார் இரவோடு இரவாக விசாரணை மேற்கொண்டு தப்பி ஓடிய கொள்ளையர்களை வலை வீசி தேடி வருகின்றனர். சினிமா பாணியில் நடந்த இந்த கொலை சம்பவம் சிவகாசி வட்டார மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT