தமிழகம்

பெண்ணின் திருமண வயதை உயர்த்தியதற்கு ஜனநாயக மாதர் சங்கத்தினர் கண்டனம்

செய்திப்பிரிவு

கூடலூர்: கூடலூரில் உள்ள திருமண மண்டபத்தில் ஜனநாயக மாதர் சங்க பேரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டக்குழு உறுப்பினர் ஜெயமோள் தலைமை வகித்தார். மாவட்டதலைவர் லீலா வாசு, கூடலூர் பகுதியில் உள்ள பிரச்சினைகள் குறித்து பேசினார். கூட்டத்துக்கு பின்னர் ஜனநாயக மாதர் சங்க மாநில பொதுச்செயலாளர் சுகந்தி கூறியதாவது:

அரசு வங்கிகளில் பெண்களுக்கு குறைந்த வட்டியில் நேரடிக்கடன் வழங்க வேண்டும்.மத்திய பாஜக அரசு அடிப்படை விஷயங்களை ஆராயாமல், பெண்ணின் திருமண வயதை 18-ல் இருந்து 21-ஆக உயர்த்தியுள்ளது. காதல் மற்றும் சாதிக் கலப்பு திருமணத்தை தடுக்கவே பெண்ணின் திருமணவயதை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதை வாபஸ் பெற வேண்டும். ரத்தசோகை, ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்ட காரணங்களால் ஏற்படும் பிரசவ மரணத்தை தடுக்க வேண்டும். கடந்த ஊரடங்கு காலத்தில் கல்வி, வேலைவாய்ப்பு, வறுமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 7,000 குழந்தைத்திருமணங்கள் நடைபெற்றுள்ளன. கூடலூர் பகுதியில் 10,000 வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை. அவர்களுக்கு மின் இணைப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

SCROLL FOR NEXT