சென்னை: எழும்பூரில் உள்ள சீனிவாசப் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான ரூ.6 கோடி மதிப்பிலான சொத்து, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்பாளரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
எழும்பூர் சீனிவாசப் பெருமாள் திருக்கோயிலுக்குச் சொந்தமான 3,300 சதுரஅடி பரப்பளவுள்ள மனை மற்றும் கட்டிடம் ஆகியவை பாலகிருஷ்ணன் என்பவரிடம் 33 ஆண்டுகளாக வாடகைக்கு விடப்பட்டிருந்தது.
இக்கட்டிடத்துக்கு நிர்ணயம் செய்யப்பட்ட நியாய வாடகை மற்றும் நிலுவைத் தொகையை கட்டத் தவறியதால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, தீர்ப்பின் அடிப்படையில் ஆக்கிரமிப்பாளரை வெளியேற்றி கோயில் வசம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த சொத்தின் மதிப்பு ரூ.6 கோடி ஆகும்.
இந்நிகழ்வின்போது கோயில் செயல் அலுவலர் அ.ரமணி மற்றும் கோயில் அலுவலர்கள் உடன் இருந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.