சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விடமேம்பாட்டு வாரிய குடியிருப்புகளுக்கு பயனாளிகளின் பங்களிப்புத்தொகையை குறைத்தும், நீண்டகால சுலப தவணைகளில் செலுத்துவதற்கான வசதியை உருவாக்கியும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய (குடிசை மாற்று வாரிய) குடியிருப்புகள் ஒதுக்கீடு பெறும் பயனாளிகள் செலுத்த வேண்டிய பங்குத்தொகையானது மிக அதிக அளவில் இருந்து வந்த நிலையில், அத்தொகையைக் குறைத்து, அதனையும் நீண்டகால தவணையில் செலுத்தும்வழிமுறைகளை உள்ளடக்கிமுதல்வர் மு.க.ஸ்டாலி்ன் உத்தரவிட்டு, அதன்படி அரசாணை யும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மறு கட்டுமான திட்டப்பகுதியில் 100 சதவீதத்துக்கும் அதிகமான கூடுதல் குடியிருப்புகள் வரும் என்றால், பங்களிப்புத் தொகையாக சென்னை மற்றும் இதர நகரங்களில் மாதம் ரூ.250 செலுத்த வேண்டும். 60 முதல் 100 சதவீதத்துக்கு உட்பட்ட கூடுதல் குடியிருப்புகளாக இருந்தால், சென்னையில் மாதம் ரூ.400-ம், இதர நகரங்களில்ரூ.300-ம் கட்ட வேண்டும்.
30 முதல் 60% கூடுதல் குடியிருப்பு என்றால் சென்னையில் மாதம் ரூ.500-ம் இதர நகரங்களில் ரூ.400-ம் செலுத்த வேண்டும். 30 சதவீதத்துக்கு குறைவாக இருந்தால், சென்னையில் ரூ.1.50 லட்சம் அல்லது திட்டமதிப்பீட்டில் 10% இதில் குறைவான தொகையும், மற்ற நகரங்களில் ரூ.1 லட்சம் அல்லது திட்டமதிப்பில் 10% இதில் குறைவான தொகையும் நிர்ணயிக்கப்பட்டு, 20 ஆண்டுகளில் சுலப மாதத் தவணையாக செலுத்தலாம். தவணைத் தொகையை தவறாமல் செலுத்தினால் பகுதி வட்டி திரும்ப வழங்கப்படும்.
மறு கட்டுமான திட்டப்பகுதியில் உள்ள இதர பயனாளிகள், பங்களிப்புத் தொகையாக தற்போது சென்னையி்ல் ரூ.1.50 லட்சமும், இதரபகுதிகளில் ரூ.1 லட்சமும் நிர்ணயிக்கப்பட்டு 20 ஆண்டுகளில் சுலப தவணையில் செலுத்தலாம். மறு கட்டுமான திட்டப்பகுதியில் பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு, சென்னை மற்றும் இதர மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் என திட்டப்பகுதிக்கேற்ப, பயனாளிகளின் பங்குத்தொகை நிர்ணயிக்கப்படும். பயனாளிகள் பங்களிப்புத் தொகை அதிகமாக இருந்தால், உள்கட்டமைப்பு வசதிகளுக்கான தொகை பெறப்பட மாட்டாது.
வசிப்பிடத்திலேயே வீடுகள்கட்டும் திட்டத்தில், பயனாளிகளுக்கு சென்னையில், ரூ.1.50 லட்சம் அல்லது திட்டமதிப்பீட்டில் 10 சதவீதம் இவற்றில் குறைவான தொகை, இதர நகரங்களில் ரூ.1 லட்சம் அல்லது 10 சதவீத திட்ட மதிப்பீடு இவற்றில் குறைவான தொகை நிர்ணயிக்கப்பட்டு 20ஆண்டுகளில் சுலப மாத தவணையாக பெறப்படும்.
புதிய திட்டப்பகுதிகளில் கட்டப்படும் குடியிருப்புகளில் மறுகுடியமர்வு மற்றும் பொருளாதாரத்தில் நலிவுற்ற பயனாளிகளுக்கு, திட்டங்கள் செயல்படுத்தப்படும் பகுதிகளுக்கேற்ப பயனாளிகள் பங்களிப்புத் தொகை நிர்ணயிக்கப்படும். ஒதுக்கீடு செய்யப் படாமல் மீதமுள்ள குடியிருப்புகள் பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு வழங்கப்படும்.