தமிழகம்

பிஎஸ்எல்வி சி32 ராக்கெட் மூலம் ஐஆர்என்எஸ்எஸ் 1எப் செயற்கைக் கோள் நாளை மாலை விண்ணில் பாய்கிறது: 54 மணிநேர கவுன்ட் டவுன் தொடங்கியது

செய்திப்பிரிவு

கடல் ஆராய்ச்சிக்கான ஐஆர்என் எஸ்எஸ் 1எப் செயற்கைக் கோள் நாளை மாலை பிஎஸ்எல்வி சி32 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான 54 மணிநேர கவுன்ட் டவுன் நேற்று காலை தொடங்கியது.

இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) பல்வேறு ஆராய்ச்சிகளுக்காக செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. கடல் ஆராய்ச்சிக்காக பிரத்யேகமாக 7 தொலை உணர்வு செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த திட்டமிட்டது. இதில் முதலாவதாக, ஐஆர்என்எஸ்எஸ் 1ஏ செயற்கைக் கோள் 2013 ஜூலையிலும், 1பி செயற்கைக் கோள் 2014 ஏப்ரலிலும், 1சி செயற்கைக் கோள் அக்டோபரிலும், 1டி செயற்கைக் கோள் 2015 மார்ச்சிலும், 1இ செயற்கைக்கோள் 2016 ஜனவரியிலும் விண்ணில் ஏவப்பட்டன.

இந்த வரிசையில் 6-வதான ஐஆர்என்எஸ்எஸ் 1எப் செயற்கைக் கோள், ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி32 ராக்கெட் மூலம் நாளை (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான 54 மணி நேர கவுன்ட் டவுன் நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணிக்கு தொடங்கியது.

நம் நாட்டிலேயே உருவாக்கப் பட்ட 1,425 கிலோ எடை கொண்ட ஐஆர்என்எஸ்எஸ் 1எப் செயற்கைக் கோள், குறைந்தபட்சம் 284 கி.மீ., அதிகபட்சம் 20,657 கி.மீ. கொண்ட புவிவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்படவுள்ளது.

கடல் ஆராய்ச்சிக்காக பிரத்யேகமாக அனுப்பப்படும் இந்த செயற்கைக் கோள் இயற்கைப் பேரிடர் காலங்களில் கடல் பயணத்துக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 1,500 கி.மீ. சுற்றளவுக்குள் உள்ள கடல் வழிகள், கடல் எல்லைகள் மட்டுமல்லாமல், தரையில், வான்வெளியில் செல்லும் வாகனங்களையும் இதன்மூலம் துல்லியமாக கண்காணிக்க முடியும்.

SCROLL FOR NEXT