பேரணாம்பட்டு: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை, மீனூர் மலையடிவாரம், அக்ரகாரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மாதம் அடுத்தடுத்து நிலநடுக்கம் உணரப்பட்டது. மீனூர் பகுதியில் 3 வீடுகளில் விரிசல் ஏற்பட்டன. இந்நிலையில், பேரணாம்பட்டு அடுத்த டி.டி.மோட்டூர், சிந்தகனவாய், கமலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சில வாரங்களுக்கு முன்பு நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு பேரணாம்பட்டு எம்ஜிஆர் நகர், கலைஞர் நகர், தரைக்காடு, புத்துக்கோயில் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து 3 முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தை உணர்ந்து பொதுமக்கள் உறக்கத்தில் இருந்து கண்விழித்து அலறியடித்தபடி வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து விடிய, விடிய வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
இது குறித்து தகவலறிந்த பேரணாம்பட்டு வருவாய்த் துறையினர் சம்பவ இடத்துக்குசென்று விசாரணை நடத்தினர். பேரணாம்பட்டு மற்றும் குடியாத்தம் பகுதிகளில் தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் லேசான நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.