தமிழகம்

மாணவியை வெட்டியவர் மர்மமான முறையில் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

திருவில்லிபுத்தூர் பெருமாள்பட்டி தெருவைச் சேர்ந்த ரவி என்பவரின் மகன் ராஜ்குமார் என்பவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வேறு சிலருடன் அம்மாணவி பேசுவதை ராஜ்குமார் கண்டித்துள்ளார். இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 21-ம் தேதி தேர்வு எழுதிவிட்டு மாணவி வெளியே வந்தபோது அங்கு வந்த ராஜ்குமார் மாணவியை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினார்.

இதில் காயமடைந்த மாணவி மதுரை தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். இதுதொடர்பாக, திருவில்லிபுத்தூர் நகர போலீஸார் வழக்கு பதிவு செய்து ராஜ்குமாரை தேடி வந்தனர்.

இந்நிலையில், திருவில்லி புத்தூர் பெரியகுளம் கண்மாயில் உடல் அழுகிய நிலையில் ராஜ்குமார் சடலம் கண்டெடுக்கப் பட்டது. தகவலறிந்த போலீஸார் ராஜ்குமார் சடலத்தைக் கைப் பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘‘மாணவியைக் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்துடன் ராஜ்குமார் இருந்திருக்கலாம். எனவே, விஷம் குடித்துவிட்டு வந்து, மாணவியை வெட்டிவிட்டு தப்பிச்சென்று கண்மாய் பகுதியில் மயங்கி விழுந்து இறந்திருக்கலாம்” என்றனர். இருப்பினும், ராஜ்குமார் மரணம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT