மதுரை: மதுரையில் தனியார் கட்டிட சுவர் இடிந்து விழுந்து இரவுப் பணியில் இருந்த தலைமைக் காவலர் உயிரிழந்தார். மேலும், ஒருவருக்கு கை முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் காவல்துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுரை விளக்குத்தூண் காவல் நிலைய சட்டம், ஒழுங்கு பிரிவு தலைமைக்காவலர்கள் சரவணன் (47), கண்ணன் (44). இவர்கள் மதுரை கிரைம் பிராஞ்ச் காவல் குடியிருப்பில் வசித்தனர். இருவரும் நேற்று முன்தினம் இரவுப் பணியில் ஈடுபட்டிருந்தனர். பாதுகாப்புப் பணியின்போது, அதிகாலை நேரத்தில் மதுரை கீழவெளி வீதியிலுள்ள கணபதி ஸ்டோர் என்ற பூச்சி மருந்துக் கடையின் முன்பாக பிளாட்பாரத்தில் அமர்ந்துகொண்டு வெங்காய மார்க்கெட்டிற்கு வாகனங்களை கண்காணித்துக் கொண்டிருந்தனர்.
அதிகாலை 12.30 மணிக்கு மேல் எதிர்பாராத விதமாக கடையின் மேற்கு பகுதியிலுள்ள பக்கவாட்டுச் சுவர் திடீரென இழுந்து விழுந்தது. இடிபாடுக்குள் இருவரும் சிக்கினர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பெரியார் தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இருப்பினும், தலைமைக்காவலர் சரவணன் சம்பவ இடத்தில் உயிரிழந்ததும், மற்றொரு காவலரான கண்ணனுக்கு தலை உள்ளிட்ட இடங்களில் காயமும், கையில் எலும்பு முறிவும் ஏற்பட்டதும் தெரிய வந்தது. தகவல் அறிந்த காவல் ஆணையர் பிரேமானந்த் சின்கா, தெற்கு காவல் துணை ஆணையர் தங்கத்துரை உள்ளிட்ட காவல் துறையினர் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். காயமடைந்த கண்ணன் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து விளக்குத்தூண் போலீஸார் விசாரிக்கின்றனர்.
மதுரை காவல்துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் பற்றி போலீஸார் கூறுகையில், ''இடிந்து விழுந்த கட்டிடம் பழமையானதாக இருந்துள்ளது. இதை பராமரிக்க, ஏற்கெனவே மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியதாக தெரிகிறது. இருப்பினும், கட்டிட உரிமையாளர் தனது கட்டிடத்தை சீரமைக்காமல் இருந்துள்ளார். அவர் மீது மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என, நம்புகிறோம்,'' என்றனர்.
இதற்கிடையில், மதுரை கிரைம் பிராஞ்ச் குடியிருப்பு அருகிலுள்ள போலீஸ் கிளப்பில் சரவணன் உடலுக்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு நேரில் அஞ்சலி செலுத்த உள்ளார். மேலும், மருத்துவ மனையிலுள்ள கண்ணனை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவார்.
தலைமைக்காவலரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு: இச் சம்பவம் குறித்து மதுரை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில், ''இந்த துயர சம்பவத்தை அறிந்த தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் மிகவும் வேதனையுற்று தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்த தலைமைக்காவலர் சரவணன் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணமும், அவரது மனைவிக்கு அரசுப் பணியும் வழங்கப்படும். அது மட்டுமின்றி பலத்த காயமும், எலும்பு முறிவும் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மற்றொரு காவலரான கண்ணனுக்கு ரூ.5 லட்சம் நிவாரணமும் வழங்க ஆணையிட்டுள்ளார்,'' இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.