தமிழகம்

தமிழக அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் இடம்பெறுவார்: அமைச்சர் சேகர் பாபு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் இடம்பெறுவார் என்று அமைச்சர் சேகர் தெரிவித்தார்.

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சென்னை பேராயர் ஏற்பாட்டின்படி சென்னையில் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''தென்னிந்திய திருச்சபை பேராயத்தின் சார்பில் சென்னை பேராயர் அன்பிற்கினிய பேராயர் ஜார்ஜ் ஸ்டீபன், 2000 பேருக்கு கிறிஸ்துமஸ் பெருவிழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளார். அதன் பொருட்டு நானும் அவரோடு பங்கேற்று கிறிஸ்துமஸ் பெருவிழாவில் மகிழ்ச்சியுற முகமலர்ச்சியோடு மக்களைக் காணுவதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறோம்.

தமிழக முதல்வர் கிறிஸ்துமஸ் பெருவிழாவில் பங்கேற்று மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி இருக்கிறார். தமிழக முதல்வர் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் இதேபோன்று மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகின்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கின்றார். அதிலே நமது பேராயர் ஜார்ஜ் ஸ்டீபனும் பங்கேற்க உள்ளார். அவர் அழைப்பின் பேரில் தற்போது இந்த விழாவிலே திமுக சார்பில் நானும் சட்டப்பேரவை உறுப்பினர் எபிநேசரும் பங்கேற்றுள்ளோம். அடுத்து நடைடெபறும் ஒரு நிகழ்வில் முதல்வரே அவரை அழைத்து முதல்வர் நடத்தும் விழாவிலே அவரை பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார். இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் உயர்ந்தவர் தாழ்ந்தவர் இன்னார், இனியவர் என்றில்லாமல் அனைவரும் ஒன்றே. தமிழகத்தைப் பொறுத்தவரை சாதி, மதம் இனங்களுக்கு அப்பாற்பட்டு மனிதநேயத்தோடும் மக்கள் ஒற்றுமையோடு என்று வாழ விரும்பும் முதல்வர் இன்றைய தமிழக முதல்வர் என்பது நிரூபணமாகிறது.

ஆகவே, கிறிஸ்தவ பெருமக்கள் சுதந்திர தாகத்தோடு அவரவர் விரும்பும் மத வழிபாட்டிற்கு எல்லாம் வல்ல ஏசு கிறிஸ்துவோடு தமிழக முதல்வரும் உங்களுக்குச் சிறுபான்மையின மக்களுக்கு உதவியாக இருப்பார். நல்லதொரு அமைதியான சூழ்நிலையில் அமைதிப் பூங்காவாகத் தமிழகம் திகழ்வதற்கு எல்லாவகையிலும் தமிழக முதல்வர் உறுதுணையாக இருப்பார். அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் 2021'' என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

''திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் பல்வேறு அமைச்சர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். தங்கள் நிலைப்பாடு என்ன?'' என்ற செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சேகர் பாபு, ''உண்மையாக, இயக்கத்திற்காக, எதிர்பார்ப்பின்றி உழைப்பவர்களை உயர்த்தித் தூக்கிப் பிடிப்பவர் முதல்வர் ஸ்டாலின். அந்த வகையில் திமுக இளைஞரணிச் செயலாளர், இடைத்தேர்தல் என்றாலும் சரி, திமுக தோழர்களின் சுகதுக்க நிகழ்ச்சிகள் என்றாலும் சரி, திமுக நிகழ்ச்சிகள் என்றாலும் சரி, மக்களுக்கு உதவி புரிகின்ற நிகழ்ச்சிகள் என்றாலும் சரி, திமுக தோழர்களுக்கு இன்னல் எனும்போது அவர்களுக்கு உதவி புரிகின்ற நிகழ்ச்சி என்றாலும் சரி, தலைவரை, தமிழக முதல்வரைப் போலவே அவரும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். ஆகவே தமிழக முதல்வர் நிச்சயம் அதற்குண்டான அங்கீகாரத்தை வழங்குவார். மேலும் மக்கள் பணி சிறப்படைய அவரும் அமைச்சரவையில் இடம்பெறுவார்'' என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT