மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் 2021-22-ம் கல்வி ஆண்டுக்கு மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:
2021-22-ம் கல்வி ஆண்டில்மருத்துவம் சார்ந்த படிப்புகளில்சேர 64,900 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில், 19 மருத்துவம் சார்ந்தபட்டப் படிப்புகளுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,276 இடங்களும், சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் 13,832 இடங்களும் உள்ளன. இவற்றின் முழு விவரங்கள் மருத்துவக் கல்வி இயக்குநரக தேர்வுக் குழுவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ளது.
மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கான இணையவழி கலந்தாய்வில் முதலில் இன்று (டிச.22)சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடக்கிறது. இதில், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், மாற்றுத் திறனாளிகள் கலந்து கொள்கின்றனர்.
அதனைத் தொடர்ந்து பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடக்கிறது. அதற்கான தரவரிசை பட்டியல் இன்று (டிச.21) வெளியிடப்பட்டுள்ளது. இதை இணையதளத்தில் பார்க்கலாம்.
ஒமைக்ரான் அச்சுறுத்தல் இருப்பதால் பண்டிகை கொண்டாட்டங்களில் சமூக இடைவெளி, முகக்கவசம் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும். காவல் துறையும், உள்ளாட்சித் துறையும் விதிமுறைகளை கடை பிடிப்பதை கண்காணிக்கும்.
தென் ஆப்ரிக்காவில் புதிய வைரஸ் பரவும் தகவல் தெரிந்ததும்முதல்வர், விமான நிலையத்துக்கே நேரில் சென்று விதிமுறைகளை கடுமையாக்க உத்தரவிட்டார்.
மதுரையில் ரூ.40 லட்சம் செலவில் எலும்பு வங்கி தொடங்கப்பட்டுள்ளது. இந்த வசதி தென் தமிழகத்தில் எந்த அரசு, தனியார் மருத்துவமனையிலும் இல்லை.
முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் முறைகேடு நடந்தது நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும். முதலமைச்சர் காப்பீடு திட்ட வருமான உச்ச வரம்பு ரூ.72 ஆயிரத்திலிருந்து ரூ.1.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஆணை 2022 ஜன.11-ம் தேதி முதல் நடை முறைக்கு வரும்.
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிர மணியன் கூறினார்.