கோவையில் காலமான மு.க.தமிழரசுவின் மாமியார் ஜெயலட்சுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின். படம்: ஜெ.மனோகரன் 
தமிழகம்

மு.க.தமிழரசுவின் மாமியார் உடலுக்கு முதல்வர் அஞ்சலி

செய்திப்பிரிவு

கோவையில் காலமான மு.க.தமிழரசுவின் மாமியார் ஜெயலட்சுமியின் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அஞ்சலி செலுத்தினார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் சகோதரர் மு.க.தமிழரசு. இவரது மாமியார் ஜெயலட்சுமி(83), கோவை வடவள்ளி கஸ்தூரி நாயக்கன்பாளையத்தில் கணவர் ராஜமாணிக்கத்துடன் வசித்து வந்தார். நுரையீரல் பாதிப்பு காரணமாக பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டிருந்த ஜெயலட்சுமி, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் காலமானார்.

இவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை 10.45 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்தார். கஸ்தூரி நாயக்கன்பாளையத்திலுள்ள வீட்டில் வைக்கப்பட்டிருந்த ஜெயலட்சுமியின் உடலுக்கு, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். மு.க.தமிழரசு, மோகனா தமிழரசு, இவர்களின் மகன் நடிகர் அருள்நிதி ஆகியோருக்கு ஆறுதல் கூறினார். மு.க.ஸ்டாலினுடன் மனைவி துர்கா ஸ்டாலின், சகோதரி செல்வி,மகன் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. ஆகியோரும் வந்துஅஞ்சலி செலுத்தினர். பின்னர், நண்பகல் 12.10 மணிக்கு அங்கிருந்து புறப்பட்ட மு.க.ஸ்டாலின், தனி விமானம் மூலம் மீண்டும் சென்னைக்கு திரும்பினார்.

முன்னதாக, முன்னாள் மத்திய அமைச்சரும், மு.க.தமிழரசுவின் மற்றொரு சகோதரருமான மு.க.அழகிரி தனது மகன் துரை தயாநிதியுடன் வந்து, ஜெயலட்சுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அமைச்சர்கள் பொன்முடி, பெரிய கருப்பன், முத்துசாமி, செந்தில் பாலாஜி, மு.பெ.சாமிநாதன், மெய்யநாதன், காந்தி, ராஜ கண்ணப்பன், கீதா ஜீவன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். மாலையில், பொம்ம ணம்பாளையம் மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது.

SCROLL FOR NEXT