திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே இரண்டலப் பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் மிஸ்பா (31). இவர் சிங்கப்பூரில் ஓட்டுநராகப் பணி புரிகிறார். இவரது மனைவி வெள்ளோடு கிராமத்தைச் சேர்ந்த மெஸியா (24). 5 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களது திருமணம் நடந் துள்ளது. இவர்களுக்கு குழந்தை இல்லை.
இந்நிலையில், மெஸியாவிடம் வரதட்சணை கேட்டு கணவர் வீட்டார் துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த 20 நாட்களுக்கு முன்பு மிஸ்பா சிங்கப்பூரிலிருந்து ஊருக்கு வந்துள்ளார். கணவன், மனைவி இடையே குடும்பத் தகராறு மீண்டும் எழுந்ததால், கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஊர் பெரியவர்கள் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மெஸியா வுக்கு உடல்நிலை பாதிக்கப் பட்டதாகக்கூறி அவரது கணவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால், மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
இதையறிந்த மெஸியாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனை வாயிலை முற்றுகையிட்டு மெஸியாவை கணவர் தாக்கி கொன்று விட்டதாக கூறி போராட் டம் நடத்தினர்.
இதையடுத்து தாலுகா போலீஸார் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்தனர். மெஸியாவுக்கு திருமணமாகி 5 ஆண்டுகளே ஆனதால் கோட்டாட்சியர் காசி செல்வி விசாரணை நடத்தி வருகிறார்.