உடன் பிறந்த சகோதரி ஏமாற்றியதால் 4 வயது மகனை கிணற்றில் தள்ளி கொலை செய்துவிட்டு, தற்கொலைக்கு முயன்ற தாய் கைது செய்யப்பட்டார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகில் உள்ள அல்லிநகரத்தைச் சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ். இவரது மனைவி லட்சுமி(27). இவர்களுக்கு மகன் லட்சுமணன்(4) இருந்தார்.
லட்சுமி தனது சகோதரி பேச்சியம் மாளுக்கு 3 பவுன் நகை கொடுத்தார். இதை அவர் திருப்பித் தரவில்லை. மனைவியிடம் நகையை வாங்கி வருமாறு ஜெயப்பிரகாஷ் கண்டித் துள்ளார். திருமங்கலம் எட்டிநாலி புத்துாரில் உள்ள சகோதரி வீட்டுக்கு நேற்று முன்தினம் சென்ற லட்சுமி 3 பவுன் நகையைக் கேட்டும் அவர் கொடுக்கவில்லை.
இதனால் விரக்தி அடைந்த லட்சுமி தனது 4 வயது மகனுடன் சென்று திருமங்கலம் அருகே உள்ள தனியார் கிணற்றில் மகனைத் தள்ளிவிட்டு கொலை செய்தார். பின்னர் தானும் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
தகவல் அறிந்த திருமங்கலம் தீயணைப்பு வீரர்கள் வந்து லட்சுமியை உயிருடன் மீட்டனர். பின்னர் லட்சுமணனின் உடல் மீட்கப்பட்டது.
மகனை கிணற்றில் தள்ளி கொலை செய்ததாக லட்சுமியை காவல் ஆய் வாளர் ராதாமகேஷ் கைது செய்தார்.