தஞ்சாவூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட பழைய பேருந்து நிலையத்தில், பயணிகள் அமர இருக்கைகள் அமைத்த தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.29 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டது. இதில், 39 பேருந்து நிறுத்தங்கள், 93 கடைகள், 4 பொதுக் கழிப்பறை கட்டிடங்கள், கண்காணிப்பு அறை, காவலர் அறை, கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த பேருந்து நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தமிழக முதல்வர் கடந்த டிச.8-ம் தேதி காணொலி வாயிலாக திறந்து வைத்தார். பின்னர், ஒரு சில பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதையடுத்து, நேற்று முதல் பழைய பேருந்து நிலையத்தில் அனைத்து நகரப் பேருந்துகளும் வழக்கம்போல இயக்கப்பட்டன.
பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் அமர இருக்கைகள் ஏதும் அமைக்கப்படவில்லை. இதனால், பயணிகள் தரையில் அமர்ந்தும், நின்றுகொண்டும் பேருந்துக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தஞ்சாவூர் மக்கள் நலப் பேரவையின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் வெ.ஜீவக்குமார் கூறியது:
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்ட பழைய பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கான இருக்கைகள் அமைக்கப்படவில்லை. பயணிகள் தரையில் அமர்ந்தும், நின்று கொண்டே இருப்பதால் கடும் அவதிக்குள்ளாகின்றனர். மேற்கூரையும் பெயரளவுக்கே பொருத்தப்பட்டுள்ளது. மழை பெய்தால் சாரல் அடிக்கும், வெயில் காலங்களிலும் வெப்பம் அதிகமாக காணப்படும் நிலையில் பொருத்தப்பட்டுள்ளது. பல கோடி ரூபாய் செலவு செய்து அமைக்கப்பட்ட பேருந்து நிலையம் பார்க்க அழகாக இருக்கிறதே தவிர, மழை, வெயிலில் பொதுமக்களுக்கு பயன்தராத வகையில் உள்ளது.
பேருந்து நிலையத்தில் பொதுமக்கள், பயணிகள் அமர இருக்கைகள்கூட அமைக்காமல் உள்ளது வேதனை அளிக்கிறது. எனவே, பேருந்துக்கு காத்திருக்கும் பயணிகள் அமர தேவையான இருக்கைகளை உடனடியாக அமைக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து மாநகராட்சி பொறியாளர்களிடம் கேட்டபோது, ‘‘பழைய பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு இருக்கைகள் ஓரிரு நாட்களில் பொருத்தப்படும்’’ என்றனர்.