மாதனூர் அருகே கனமழையால் சேதமடைந்த தரைப்பாலத்தை சீரமைக்க வலியுறுத்தி வியாபாரிகள் நேற்று கடைகளை அடைத்துபோராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வட்டம், மாதனூரில் இருந்து குடியாத்தம் செல்லும் சாலையில் உள்ள பாலாற்றின் தரைப்பாலம் கனமழையால் கடந்த மாதம் அடித்துச்செல்லப்பட்டது. இதனால், அப்பகுதியில் போக்கு வரத்து துண்டிக்கப்பட்டது. இந்த பாலத்தை சரி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுத்தும் அதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் இதுவரை செய்யாமல் உள்ளதை கண்டித்து மாதனூர் ஒன்றியத்தைச் சேர்ந்த வியாபாரிகள் சுமார் 300-க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து வியாபாரிகள் கூறும்போது, ‘‘கடந்த மாதம் பெய்த கனமழையால் மாதனூர் - உள்ளி செல்லும் பாலாற்று தரைப்பாலம் அடித்துச்செல்லப்பட்டது. இத னால், சுற்றியுள்ள 80-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இப் பகுதில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
பேருந்து வசதி இல்லாததால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள் ளனர். மாதனூர், அகரம், ஆம்பூர் பகுதிகளில் இருந்து குடியாத்தம் செல்ல வேண்டுமென்றால் சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவு சுற்றிச்செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அதேபோல, குடியாத்தம் பகுதியில் இருந்து மாதனூர் பகுதிக்கு அன்றாட தேவைக்கு வந்து செல்வோர் சாலை வசதி இல்லாததால் கடந்த ஒரு மாதமாக பரிதவித்து வருகின்றனர். தொழி லாளர்களும் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக மழை பெய்யவில்லை. பாலாற்றில் வெள்ளப்பெருக்கும் தற்போது இல்லை. எனவே, சேதமடைந்த தரைப்பாலங்களை சீரமைக்க வேண்டும். தண்ணீர் வரத்து குறைந்துள்ள தரைப்பாலங்கள் வழியாக போக்குவரத்து தொடங்க வேண்டும். பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும் இதுநாள் வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதை கண்டித்தே கடையடைப்புப் போராட்டத்தை நடத்தி வருகிறோம்’’ என்றனர்.
இதனைத்தொடர்ந்து, கடை யடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள் ஊர்வல மாக சென்று மாதனூர் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு மழை யால் சேதமடைந்த பாலங்களை சீரமைத்து தர வேண்டும் என முழுக்கமிட்டனர்.
தகவலறிந்த, ஆம்பூர் காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் அங்கு சென்று வியா பாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பிறகு, கனமழையால் சேதமடைந்த இடங்கள் புனரமைக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் தரைப்பாலம் அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் வாக்குறுதியளித்தனர். அதன்பேரில், வியாபாரிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.