புதுச்சேரி : "இரண்டாவது தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டால்தான் முதல் தவணை வேலை செய்யும். எனவே தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் தயக்கம் காட்டக் கூடாது" என புதுச்சேரி துணை நிலை ஆளுநரும், தெலுங்கானா மாநில ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் அறிவுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் கரோனா பரவலை முற்றிலுமாக கட்டுப்படுத்துவதற்கு சுகாதாரத் துறை பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி பாரதி வீதியில் வீடுகள், கடைகள் தோறும் சென்று கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமினை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று( டிச. 21) ஆய்வு செய்தார். பொதுமக்கள், நடைபாதை வியாபாரிகள், கடை ஊழியர்கள் ஆகியோரிடம் தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான ஆவணம், விவரங்களைக் கேட்டறிந்தார். தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் வைத்திருந்தவர்களைப் பாராட்டினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் தமிழிசை, ‘‘சுகாதாரத் துறைனர் சாலையில் இறங்கி மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுள்ளனரா என தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். நேரடியாக வந்து பார்த்தப்போது முதல் தவணை தடுப்பூசி போடாத பலர் இருக்கின்றனர். மேலும், முதல் தவணை தடுப்பூசி போட்டு, இரண்டாவது தவணை தடுப்பூசி போடாதவர்களும் உள்ளனர். இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டால்தான் முதல் தவணை தடுப்பூசி வேலை செய்யும். இன்றைக்கு உலக அளவில் மூன்றாவது தடுப்பூசி போட ஆரம்பித்துள்ளனர். நாம் இன்னும் இரண்டாவது டோஸ் தடுப்பூசிக்கே தயக்கம் காட்டிக்கொண்டிருக்கிறோம்.
லண்டன் போன்ற இடங்களில் லட்சக்கணக்கானோருக்கு ஒமைக்ரான் வந்துவிட்டது. ஒமைக்ரான் ஆபத்து இல்லை. சும்மா வந்துவிட்டு போய்விடம் என்ற எண்ணம் பலரிடம் இருக்கிறது. அப்படி இல்லை. ஒட்டுமொத்த மருத்துவ உலகமும் கூறுவது என்னவென்றால், இந்த தடுப்பூசியும் வேறு வகையான கரோனாவுக்கு பாதுகாப்பை தரும் என்பதுதான்.
புத்தாண்டு, பொங்கல் கொண்டாடங்கள் வருகின்றன. தேசிய இளைஞர் திருவிழாவும் நடத்தப்பட உள்ளது. ஆகவே மகிழ்ச்சியுடன் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள வேண்டும் என்றால் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
2022 புத்தாண்டை கரோனா இல்லாத, தடுப்பூசி செலுத்திக்கொண்ட புத்தாண்டாக நாம் வரவேற்போம். அதற்கு அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். கட்டாயமாக அனைவரும் இரண்டு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். நாம் கட்டாயப்படுத்துவதோடு, மக்களே கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். அரசு ஓரளவுதான் கட்டுப்பாடுகள் விதிக்க முடியும். மக்கள்தான் உணர்ந்து கொள்ள வேண்டும்’’ என்றார் ஆளுநர் தமிழிசை.
இந்த ஆய்வின்போது சுகாதாரத் துறைச் செயலர் உதயகுமார், சுகாதாரத் துறை இயக்குநர் ஸ்ரீராமலு மற்றும் மருத்துவ அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.