சென்னை: தொழிலக பாதுகாப்பு, சுகாதாரஇயக்ககத்தின் பணித் திறனாய்வுக் கூட்டம் தொழிலாளர் நலத் துறைஅமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் சென்னை கிண்டியில் உள்ள இயக்ககத்தின் அரங்கில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது: வெளி மாநிலத் தொழிலாளர்களையும் நமது தொழிலாளர்களுக்கு சரிசமமாக கருதி அவர்களுக்கு கிடைக்க வேண்டிய குறைந்தபட்ச கூலி, 8 மணிநேர பணி, மிகை நேரத்துக்கான இரட்டிப்பு ஊதியம், உரிய காலத்தில் சம்பளம், ஓய்வறை, கழிவறை வசதி ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும்.
தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களுக்கு பாலியல் வன்கொடுமை நிகழாத வண்ணம் உரிய வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தர வேண்டும். தொழிற்சாலைகளில் குழந்தைகள் காப்பக வசதி, தரமான உணவு வழங்குவதை கண்காணிப்பதுடன், குழந்தை தொழிலாளர்கள் மற்றும் கொத்தடிமை தொழிலாளர்கள் முறையை ஒழிக்க வேண்டும்.
உயிரிழப்பு விபத்துகள் நிகழும்போது அலுவலர்கள் உடனே ஆய்வு மேற்கொண்டு நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உரிய நேரத்தில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெறப்படும் புகார்கள் மீது உடனே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் கா.ஜெகதீசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.