ராமேசுவரம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மீனவர் சங்கத்தினர். 
தமிழகம்

தமிழக மீனவர்கள் 55 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரத்தில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் வேலைநிறுத்தம்

செய்திப்பிரிவு

ராமேசுவரம்: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 55 தமிழக மீனவர்ளையும், 8 படகுகளையும் மத்திய, மாநில அரசுகள் மீட்க வலியுறுத்தி, ராமேசுவரத்தில் நேற்று (திங்கட்கிழமை) மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கி கண்டன ஆர்ப்பாட்டத்தையும் நடத்தினர். மேலும் உண்ணாவிரதம் மற்றும் ரயில் மறியல் போராட்டங்களையும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து சென்று நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தென்னரசு, லியோன், பீட்டர் கருப்பையா உள்ளிட்ட 6 பேருக்குச் சொந்தமான விசைப்படகுகளில் இருந்த 43 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.

அதேபோல, மண்டபம் துறைமுகத்தில் இருந்து சென்ற சபரிதாஸ், அருளானந்தம் ஆகிய இருவரது விசைப்படகுகளில் இருந்த 12 பேரையும் இலங்கை கடற்படை சிறைபிடித்தது.

இந்நிலையில், இந்த 55 மீனவர்களையும், 8 படகுகளையும் உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கினர்.

இதனால் ராமேசுவரத்தில் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையோரங்களில் நங்கூரமிடப்பட்டிருந்தன. விசைப்படகு மீனவர்கள் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடலுக்குச் செல்லவில்லை.

இதே கோரிக்கையை வலியுறுத்தி ராமேசுவரம் பேருந்து நிலையம் எதிரே மீனவப் பிரதிநிதி சேசுராஜா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சகாயம், போஸ், தேவதாஸ், தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட மீனவப் பிரதிநிதிகள் முன்னிலை வகித்தனர்.

மேலும் நாளை (புதன்கிழமை) தங்கச்சி மடத்தில் உண்ணாவிரதப் போராட்டமும், ஜனவரி 1-ம் தேதி ரயில் மறியல் போராட்டமும் நடத்தப்படும் என மீனவர்கள் அறிவித்தனர்.

முன்னதாக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவத்துக்கு தமிழகமுதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும்பல்வேறு அரசியல் கட்சிகளின்தலைவர்கள் கண்டனம் தெரிவித்துஇருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT