தமிழ்நாட்டில் அதிகம் தற்கொலை செய்துகொள்பவர்களின் பட்டிய லில் விவசாயிகளுக்கு அடுத்த இடத்தில் பஞ்சாலைகளில் தங்கி வேலை செய்யும் சுமங்கலி திட்ட இளம்பெண்கள் இருப்பதாக ‘கேர்-டி’ (CARE-T: Community Awareness Research Education Trust) என்ற அமைப்பின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கோவை கவுண்டம்பாளையம், சூலூர், வால்பாறை, ஆத்தூர், அன்னவாசல் (புதுக்கோட்டை), வில்லிபுத்தூர் (விருதுநகர்) ஆகிய இடங்களில் செயல்படும் இந்த அமைப்பு, சுமங்கலி திட்டத் தின் கீழ் பஞ்சாலைகளில் தங்கி பணிபுரியும் இளம் பெண்களிடம் கலந்தாய்வுகளை நடத்தி அவர் களின் மன அழுத்தத்தை நீக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக இந்த திட்டத்தைச் சேர்ந்த 5,843 பெண்களிடம் கவுன் சலிங் செய்ததில் 982 பேர் தற் கொலை எண்ணத்தில் தீவிரமாகி இருந்ததும், 86 பேர் தற்கொலை செய்து கொண்டதும் கண்டறியப்பட் டுள்ளது.
இதுகுறித்து இம்மையத்தின் முதன்மை இயக்குநர் எஸ்.எம்.பிருதிவிராஜ் ‘தி இந்து’விடம் கூறிய தாவது:
தமிழ்நாட்டில் 2 லட்சத்து 60 ஆயிரம் பெண்கள் கேம்ப் கூலிகளாக பஞ்சாலை உள்ளிட்ட நிறுவனங்களில் பணியில் உள்ளனர். 5 முதல் 8-ம் வகுப்பு வரை படித்த 19 வயதுக்கு உட்பட்ட பெண் கள் இதில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
ஒரு நிறுவனத்தில் அப்ரன்டீஸ் (பணி பயிற்சி காலம்) பணிக்கு வருபவர்கள் 18 வயது நிரம்பிய வர்களாக இருக்க வேண்டும். அவர்களுக்கு தினக்கூலியாக ரூ.286 அளிக்க வேண்டும். அவர் களுக்கு 8 மணி நேரப் பணி மற்றும் சட்ட ரீதியான விடுமுறைகள் அளிக்கப்பட வேண்டும். இந்த கணக்கின்படி மாதத்துக்கு ஒரு நபர் ரூ.7,150 ஊதியம் பெற வேண்டும்.
ஆனால் சுமங்கலி திட்டம் என்ற பெயரில் சிறுவயதுப் பெண்களை 3 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் பணியில் ஈடுபடுத்துகின்றனர். இவர் களுக்கு தினமும் 12 மணி நேர வேலையும், கூலியாக ரூ.3,500-ம் அளிக்கிறார்கள். அதிலும் தங்கும் அறை, சாப்பாடு ஆகியவற் றுக்காக பணத்தை பிடித்துக் கொள்கிறார்கள். 3 ஆண்டுகளின் முடிவில் ஒரு தொழிலாளிக்கு மொத்தமாக ரூ.40 ஆயிரம், ரூ.50 ஆயிரம் என்று அளிக்கிறார்கள். அதை வைத்து அவர்கள் திரு மணம் செய்து கொள்ளலாம். இதையே ‘சுமங்கலி திட்டம்’ என்று அழைக்கிறார்கள்.
இந்த திட்டத்தின் கீழ் பணிபுரியும் பெண்கள் வீட்டை பிரிந்து இருப்பது, முக்கியமான பண்டிகைகள் மற்றும் நெருக்கமான உறவுக்காரர்களின் இறப்புக்கு கூட விடுமுறை கிடைக் காதது, என்று பல்வேறு விதமான மன அழுத்தத்துக்கு ஆளாகிறார் கள். இந்த நெருக்கடியில் இருந்து தப்பிச் செல்லவும் அவர்களால் முடிவதில்லை.
ஞாயிற்றுக் கிழமைகளிலோ, மாதவிடாய் காலங்களிலோ கூட அவர்களுக்கு விடுமுறை கிடைப் பதில்லை. எங்கள் பிரதிநிதிகள் ஒவ்வொரு ஊரிலும், சுமங்கலி திட்டத்தில் உள்ள பெண்களை சந்தித்து பேசினர். நாங்கள் சந்தித்த 5,843 பெண்களில் 99 சதவீதம் பேர் பல்வேறு விதமான மன அழுத்தங் களால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு கவுன்சலிங் கொடுத்து பல்வேறு தொழிற் பயிற்சிகள் கொடுத்துள்ளோம். படிக்க ஆசைப்பட்டவர்கள் மேற் கொண்டு படிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
சுமங்கலி திட்டத்தில் பணிபுரியும் பெண்களில் 83 பேர் கடந்த 3 ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்டதாக இந்த அமைப்பு நடத்திய கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. இன்னும் ஆய்வு செய் தால் இந்த எண்ணிக்கை அதிகமாக லாம் என்று கூறப்படுகிறது.
சுமங்கலி திட்டம் தொடர்பாக பெண்ணிய ஆர்வலர்கள் சிலரது கருத்துகள் வருமாறு:
உ.வாசுகி (அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தலைவர்)
சுமங்கலித் திட்டம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், அங்கு பணி செய்யும் பெண்களுக்கு உரிய சம்பளம் வழங்க வேண்டும். உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால், அப்படியொரு உத்தரவு வந்ததே அந்த பெண்களுக்கு தெரியாது. கிராமங்களில் இருந்தே அதிகப்படியான பெண்கள் அங்கு பணிக்கு செல்கின்றனர். கிராமங் களில் சுதந்திரமாக இருந்தவர்களை அடைத்து வைக்கும்போது, மனரீதி யாக அவர்கள் பாதிக்கப்படுவார் கள். அவர்கள் சங்கம் அமைக் கவோ, போராடவோ முடியாத நிலை இருக்கிறது. இதில் அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அருள்மொழி (உயர் நீதிமன்ற வழக்கறிஞர்)
சுமங்கலித் திட்டத்தில் உள்ள பெண்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். இந்த நிலை மாற வேண்டும். அவர்கள் எப்படி இருக்கிறார்கள், எவ்வளவு சம்பளம் தரப்படுகிறது என்பதையெல்லாம் தொழிலாளர் நலத்துறை கண்காணிக்க வேண் டும். சுமங்கலி திட்டத்தில் உள்ள பெண்கள் தங்களின் பிரச்சினை களை தெரிவிப்பதற்கான வாய்ப்புகளை அரசு ஏற்படுத்தி தர வேண் டும்.