தமிழகம்

கோவை விமானநிலைய விரிவாக்கப் பணிக்காக நில உரிமையாளர்கள் 1,054 பேருக்கு மூன்று மாதங்களில் ரூ.868 கோடி பட்டுவாடா: கையகப்படுத்தும் பணியை விரைவில் முடிக்க வருவாய்த்துறையினர் தீவிரம்

டி.ஜி.ரகுபதி

கோவை விமானநிலைய விரிவாக்கத்துக்காக, இதுவரை 195 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, அதன் உரிமையாளர்கள் 1,054 பேருக்கு ரூ.868 கோடி தொகை பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

கோவை பீளமேட்டில் உள்ள சர்வதேச விமானநிலை யத்திலிருந்து சிங்கப்பூர், ஷார்ஜா ஆகிய வெளிநாடுகளுக்கும், உள் நாட்டின் முக்கிய நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. மாவட்டத்தின் தொழில் வளர்ச்சி, வர்த்தகத்தை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளை அதிகரிக் கவும், சர்வதேச நாடுகளில் இருந்து விமானங்கள் அதிகள வில் வந்து செல்லும் வகையில், ஓடுதள பாதையை விரிவாக்கம் செய்து, விமானநிலையத்தை மேம்படுத்த வேண்டும் என தொழில் துறையினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து, விமானநிலைய விரிவாக்கப் பணிகளுக்காக நிலத்தை கையகப்படுத்தும் பணியை மாவட்ட நிர்வாகம் தொடங்கியது.

கோவை விமானநிலையம் தற்போது 420 ஏக்கர் பரப்பள வில் அமைந்துள்ளது. இதில் 9,500அடி நீளத்துக்கு ஓடுதளம் அமைந்துள்ளது. இத்துடன் கூடுதலாக 640 ஏக்கர் பரப்பளவிலான இடத்தை இணைத்து, ஓடுதள பாதையை 12,500 அடி நீளத்துக்கு விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. நிலம் கையகப்படுத்துவதற்காக பிரத்யேகமாக மாவட்ட வருவாய் அலுவலர் நியமிக்கப்பட்டு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

வருவாய்த்துறை உயர் அலுவலர் ‘இந்து தமிழ்திசை’செய்தியாளரிடம் கூறும்போது, ‘‘மொத்தம் 644 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது.

இந்நிலங்கள் சிங்காநல்லூர், உப்பிலிபாளையம், காளப்பட்டி, இருகூர், நீலாம்பூர் ஆகிய கிராமங்களில் அமைந்துள்ளன. இதில் 30 ஏக்கர் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலமாகும்.152 ஏக்கர் இந்திய பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான இடமாகும்.மீதமுள்ள 462 ஏக்கர் நிலம் பொதுமக்களிடம் இருந்து கையகப்படுத் தப்பட வேண்டிய பட்டா நிலமாகும். நில உரிமையாளர்கள் மொத்தம் 3,075 பேர் உள்ளனர். இவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு காணப்பட்டுள்ளது.

நிலம் இழப்பீட்டு தொகையாக கடந்த செப்டம்பர் மாதம் தமிழகஅரசு ரூ.1,132 கோடி நிதி ஒதுக்கியது. இதையடுத்து, நிலம் கையகப்படுத்தும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

இதுவரை 1,054 உரிமையாளர்களிடம் இருந்து 195 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, ரூ.868 கோடி தொகை வழங்கப்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களில் நிலம் கையகப் படுத்தும் பணிகள் முழுமையாக முடிக்கப்படும். அதேபோல, 152 ஏக்கர் இடத்தை விரிவாக்கப் பணிகளுக்காக ஒப்படைக்க வலியுறுத்தி பாதுகாப்புத்துறைக்கு கடிதம் அனுப்பப் பட்டுள்ளது’’ என்றார்.

தொழில் வளர்ச்சி மேம்படும்

கொங்கு குளோபல் ஃபோரம்அமைப்பின் இயக்குநர் டி.நந்த குமார் கூறும்போது,‘‘கோவையில் இருந்து நேரடியாக ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படும்போது ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் அதிகரிக்கும். சரக்குகளை இங்கிருந்து நேரடியாக அனுப்பும்போது தொழில் வளர்ச்சி மேம்படும்.

தகவல் தொழில்நுட்ப நிறுவ னங்கள் உள்ளிட்டவற்றின் மூலம் வேலைவாய்ப்பும் அதிகரிக்கும்.

6 மாதங்களுக்குள் நிலம் கையகப்படுத்தும் பணியை விரைந்து முடித்து, நிலத்தை விமானநிலைய ஆணையத்திடம் ஒப்படைத்தால், அவர்கள் தங்கள் வசம் உள்ள நிதியை பயன்படுத்தி ஓடுதள பாதை விரிவாக்கத்துக்கு தேவையான கட்டமைப்புகளை ஏற்படுத்தி விடுவர்’’ என்றார்.

மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் கூறும்போது, ‘‘நிலம் கையகப்படுத்தும் பணியை விரைந்து முடிக்க தொடர்புடைய அலுவலருக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. கடந்த 3 மாதங்களாக பணிகள் வேகமடைந்துள்ளன’’ என்றார்.

SCROLL FOR NEXT