சென்னை: அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களில் பொதுப் பயன்பாட்டுக்கான மின்சாரத்துக்கு, வர்த்தக பயன்பாட்டுக்கான கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
தமிழ்நாடு மின்வாரியம் வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவற்றுக்கு மின்சார விநியோகம் செய்து வருகிறது. இதில், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தில் 100 யூனிட் வரை இலவசமாக வழங்கப்படுகிறது.
இந்நிலையில், அடுக்குமாடி குடியிருப்புகளில் பொது பயன்பாட்டு இடங்களில் பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு வர்த்தக பயன்பாட்டுக்கான கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து அடுக்குமாடி குடியிருப்பு சங்க நிர்வாகிகள் கூறியதாவது: அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களில் குடியிருப்புகள், தண்ணீர் மோட்டார், லிஃப்ட் ஆகியவை தவிர மற்ற பொதுப் பயன்பாட்டுக்கான மின்சாரத்துக்கு, வர்த்தக பயன்பாட்டுக்கான மின்சார கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் (ஆர்.ஓ. பிளான்ட்), நூலகம், விளையாட்டு திடல் ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு வர்த்தக பயன்பாட்டுக்கான கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், பொது பயன்பாட்டுக்கான மின் இணைப்பை வர்த்தக மின் இணைப்பாக மாற்ற ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.3 லட்சம் வரை செலவாகும். இதனால், குடியிருப்புவாசிகளுக்கு கூடுதல் செலவு ஏற்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: தற்போது பெரிய அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களிலேயே கடைகள், பியூட்டி பார்லர், ஜிம் உள்ளிட்டவை அமைக்கப்படுகின்றன. இவற்றை நடத்துபவர்கள், குடியிருப்புக்கான மின் இணைப்பை பெற்றுவிட்டு, குடியிருப்புகளுக்கான குறைந்த கட்டணத்தையே செலுத்துகின்றனர்.
அதேபோல, குடியிருப்பு வளாகங்களில் குடிநீர், கழிவுநீர் சுத்திகரிப்புக்காக பொருத்தப்பட்டுள்ள ஆலைகளுக்கும் குடியிருப்புக்கான மின்இணைப்பை பெற்று, குறைந்த அளவு மின்கட்டணம் செலுத்துவது சமீபத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், மின்வாரியத்துக்கு பெரிய அளவில் இழப்பு ஏற்படுகிறது.
எனவே, அடுக்குமாடி குடியிருப்புகளில் அத்தியாவசியப் பயன்பாடு தவிர இதர பொதுப் பயன்பாடுகளுக்கு, வர்த்தக பயன்பாட்டுக்கான மின்கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களில் குடியிருப்புகள், தண்ணீர் மோட்டார், லிஃப்ட் ஆகியவை தவிர மற்ற பொதுப் பயன்பாட்டுக்கான மின்சாரத்துக்கு, வர்த்தக பயன்பாட்டுக்கான மின்சார கட்டணத்தை செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.