கவிஞர் விக்ரமாதித்யன். 
தமிழகம்

டிச.26-ல் கவிஞர் விக்ரமாதித்யனுக்கு விஷ்ணுபுரம் விருது: கோவை விழாவில் கவுரவம்

செய்திப்பிரிவு

கோவை: டிசம்பர் 26-ல் கோவையில் நடைபெறும் விழாவில் கவிஞர் விக்ரமாதித்யனுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கி கவுரவிக்கப்பட உள்ளதாக விழாக் குழுவினர் தெரிவித்தனர்.

தமிழ் மரபின் தொன்மங்களோடு நவீன வாழ்வியலின் சிடுக்குகளைப் படிமங்களாக்கித் தந்தவர் கவிஞர் விக்ரமாதித்யன். இறுக்கமான படிமச் செறிவுக்கும், இசையற்ற கூற்று மொழிக்கும் மாற்றாக இவரது கவிதைகள் விளங்கின.

விக்ரமாதித்யன் திருநெல்வேலியல் 1947-ல் செப்டம்பர் 25-ல் பிறந்தவர். இவரது இயற்பெயர் நம்பிராஜன். இவர் சோதனை, அஸ்வினி, தராசு, நக்கீரன், இதயம் பேசுகிறது ஆகிய பத்திரிகைகளில் சில காலம் பணிபுரிந்தார்.

கவிஞர் விக்ரமாதித்யன் விளக்கு விருது, சாரல் விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார். விக்ரமாதித்யன் எழுத்தாக்கத்தில் 1) ஆதி கிரக யுத்தம் 2) கங்கோத்ரி 3) சொல்லிடில் எல்லை இல்லை 4) நூறு எண்ணுவதற்குள் 5) சாயல் எனப்படுவது யாதெனின் 6) சும்மா இருக்கவிடாத காற்று 7) கவிதையும் கத்தரிக்காயும் 8) அவன் அவள் 9) திருஉத்தரகோசமங்கை 10) ஊழ் 11) உள்வாங்கும் உலகம் 12) ஆகாசம் நீல நிறம் 13) மஹாகவிகள் 14) ரதோற்சவம் 15) சேகர் சைக்கிள் ஷாப் 16) எழுத்து சொல் பொருள் 17) காடாறு மாதம் நாடாறு மாதம் - வரலாற்றுக் கட்டுரைகள் என நூல் பட்டியல் நீண்டு செல்கிறது.

நவீன தமிழிலக்கியத்திற்குச் செழுமை சேர்த்த முன்னோடி படைப்பாளுமைகளைக் கவுரவிக்கும் விதமாக 'விஷ்ணுபுரம் விருது' கடந்த 2010ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. கோவையை மையமாகக் கொண்டு செயல்படும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் சார்பில் வழங்கப்படும் இந்த விருது கலையம்சம் மிக்க விருதுச் சிற்பமும், பாராட்டுப் பத்திரமும், ரூ.2,00,000/-விருதுத் தொகையும் உள்ளடக்கியது.

2021ஆம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது கவிஞர் விக்ரமாதித்யனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 26ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோவையில் நடைபெறும் விழாவில் இந்த விருது வழங்கப்பட உள்ளது.

கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ராஜஸ்தானி சங் அரங்கத்தில் டிசம்பர் 26ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5:30 மணிக்கு நிகழ்வு தொடங்கும். முன்னாள் மத்திய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெய்ராம் ரமேஷ், தெலுங்குக் கவிஞர் வடரேவு வீரபத்ருடு, இயக்குநர் வசந்த் எஸ். சாய், எழுத்தாளர் சோ.தருமன், எழுத்தாளர் ஜெயமோகன் ஆகியோர் விருது விழாவில் கலந்துகொண்டு உரையாற்ற இருக்கிறார்கள்.

விருது பெறும் எழுத்தாளுமை பற்றிய ஆவணப் படமும், அவரது படைப்புலகம் குறித்து சக எழுத்தாளர்கள் எழுதிய நூலும் வெளியிடப்படும். விருதாளரின் படைப்புகள் குறித்து இலக்கிய அமர்வுகள் நடத்தப்படும்.

SCROLL FOR NEXT